Show all

டெல்லியில் 10 ஆண்டுகள் பழைய அனைத்து டீசல் வாகனங்களின் பதிவு ரத்து

டெல்லியில் காற்று மாசு அபாய அளவை கடந்துள்ளதால் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைய டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களைச் சாலையில் அனுமதிக்க கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த 2014-ல் கூறியது. இதன் அடுத்தகட்டமாக 10 ஆண்டுகள் பழைய வாகனங்களைத் தடை செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. என்றாலும் டெல்லியில் பழைய வாகனங்களின் போக்கு வரத்து குறைந்தபாடில்லை. இது தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, டெல்லியில் பழைய வாகனங்களின் போக்குவரத்தை தடை செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க டெல்லி அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அதன் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி போக்குவரத்து காவல்துறை சார்பில், டெல்லியில் பறிமுதல் செய்யப்படும் பழைய வாகனங்களுக்கு நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திய பின் மீண்டும் இயக்கப்படுகின்றன. இதனால் உரிய பலன் ஏற்படவில்லை. டெல்லியில் கடந்த ஓராண்டில் சுமார் 3 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டன. வாகனங்களின் பதிவை போக்குவரத்து அலுவலங்கள் மட்டுமே ரத்து செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் 10 ஆண்டுகள் பழைய அனைத்து டீசல் வாகனங்களின் பதிவை ரத்து செய்யுமாறு பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களுக்கு (ஆர்.டி.ஓ) தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. வாகனங்களின் பதிவை ரத்து செய்தபின் ஒரு பொது அறிவிப்பு வெளியிட வேண்டும். பதிவு ரத்து செய்யப்பட்ட வாகனங்களின் பட்டியலை போக்குவரத்து காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இதன் அடிப்படையில் போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.