Show all

பாகிஸ்தான், இந்தியா குற்றச்சாட்டு பரிமாற்றம்.

பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நியூயார்க் நகரத்தில் இஸ்லாமிக் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிநாட்டு அமைச்சர்களின் ஆண்டு ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெஃரீப்பின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறை ஆலோசகருமான சர்தஜ் ஆஜிஸ் கூறியதாவது:

‘காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் கூறிய யோசனைகளை இந்தியா நிராகரித்திருப்பது வருந்தத்தக்கது. பாகிஸ்தானின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடுவது மட்டுமல்லாமல் எங்கள் மண்ணில் பயங்கரவாதத்தை இந்தியா தூண்டி விடுகிறது. எல்லையில் இந்திய பாதுகாப்பு படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்துகின்றனர். மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றன. காஷ்மீர் உட்பட அனைத்து சர்ச்சைகளுக்கும் சுமுகத் தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்குமாறு இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் (ஐ.ஓ.சி.) இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்றார்.

ஐ.நா. பொதுச்சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெஃரீப், ‘காஷ்மீர் பகுதியில் இருந்து ராணுவத்தை இந்தியா விலக்கிக் கொள்ள வேண்டும். நான் பாகிஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுடன் நல்லுறவைப் பேண முயற்சி மேற்கொண்டேன். ஆனால் இந்திய தரப்பில் அமைதி முயற்சியை புறக்கணித்துவிட்டனர்’ எனக் கூறியிருந்தார். மேலும், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண 4 யோசனைகளை அவர் முன்வைத்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ‘பாகிஸ்தான் அரசு முதலில் தீவிரவாத நட வடிக்கைகளை கைவிட வேண்டும். இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதம் மூலம் மறைமுகப் போரை பாகிஸ்தான் நடத்தி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். சர்வதேச சமூகம் எச்சரித்தும் பாகிஸ்தான் திருந்தவில்லை. அண்மையில் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவிய 2 பயரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர். இதேபோல இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன’ என்று பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.