Show all

இடஒதுக்கீடு கொள்கை குறித்து நாடு தழுவிய அளவில் விவாதம் நடத்த வேண்டும்.

‘தற்போதுள்ள இடஒதுக்கீடு நடை முறையைப் பாஜக ஆதரிக்கிறது. எனினும், பல்வேறு சாதி அமைப்பினர் போராட்டம் நடத்துவதால், இடஒதுக்கீடு கொள்கை குறித்து நாடு தழுவிய அளவில் விவாதம் நடத்த வேண்டும்’

என்று நடுவண் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், நடுவண் அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா நேற்று செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார்.

அரசியலமைப்பு சட்டப்படி தற்போதுள்ள இடஒதுக்கீடு நடை முறையை பாஜக முழுமையாக ஆதரிக்கிறது. எனினும், தற்போது பல மாநிலங்களில் இடஒதுக்கீடு கோரி பல்வேறு சாதி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நாடு தழுவிய அளவில் கருத்து கேட்பு அல்லது விவாதம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட் டுள்ளது.

எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு சட்டப்படி தற்போதுள்ள இடஒதுக்கீட்டை பாஜக ஆதரிக்கிறது. சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் மேம்பாடு அடைய இந்தப் பிரிவினர் அனைவருக்கும் இடஒதுக்கீடு அவசியம் என்று பாஜக நம்புகிறது. எனினும் போராட்டங்கள் அடிக்கடி நடப்பதால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம்.

இவ்வாறு கல்ராஜ் மிஸ்ரா கூறினார்.

‘‘இடஒதுக்கீட்டு முறையை மறுஆய்வு செய்யவேண்டும்’’ என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளதே?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கல்ராஜ் மிஸ்ரா கூறியதாவது:

குஜராத்தில் படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதை குறிப்பிட்டுதான் மோகன் பாகவத் கருத்து கூறியிருந்தார். ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக பிகார் முதல்வர் நிதிஷ்குமார் அதை திரித்து கூறி விட்டார். பிகாரில் தேர்தல் நடப்பதால் பாகவத்தின் கருத்தை மாற்றிச் சொல்லி மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

பிகார் தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும். பிகாரில் காங்கிரஸ் கட்சி திண்டாடிக் கொண்டிருக்கிறது. ஒரு தொகுதியில் கூட அந்தக் கட்சி வெற்றி பெறாது. அதை அறிந்துதான் தேர்தல் நேரத்தில் ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு சென்று விட்டார்.

இவ்வாறு கல்ராஜ் மிஸ்ரா கூறினார்


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.