Show all

ஓட்டுச்சீட்டு மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் இருந்து தேர்தல் சின்னங்களை அகற்ற.

ஓட்டுச்சீட்டுகள் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தேர்தல் சின்னங்கள் இடம்பெறக் கூடாது, அதை நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லோக்பால் மசோதாவை வலியுறுத்தி அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரதம், இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பிரபலமடைந்தது. இவரின் போராட்டத்தைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் லோக்பால், லோக்ஆயுக்தா அமைப்புகள் செயல்பட துவங்கியுள்ளன. மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அன்னா ஹசாரேவின் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

முன் காலத்தில் மக்களுக்கு கல்வியறிவு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதன் காரணமாகவே, ஓட்டுச்சீட்டுகளில், வேட்பாளர்கள் சார்ந்த கட்சியின் தேர்தல் சின்னங்கள் இடம்பெற்று வந்தன. ஆனால், தற்போதோ, மக்கள், கல்வி, தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் முன்னேறி விட்டனர். தேர்தல் ஆணையமும், ஓட்டுச்சீட்டு முறையிலிருந்து மாறி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என முன்னேறியுள்ளது.

ஓட்டுச்சீட்டு மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளரின் பெயர் மற்றும் அவரது புகைப்படம் இடம்பெற்றுள்ள நிலையில், மேலும் எதற்கு அவர் சார்ந்த கட்சியின் சின்னம். ஓட்டுச்சீட்டு மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் இருந்து தேர்தல் சின்னங்களை அகற்ற வேண்டும், இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி, நாடு தழுவிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்க உள்ளதாகவும் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.