Show all

ஐந்து மாநிலங்களில் பாஜக சறுக்கல் எதிரொலி! வரும் நாடளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிக்கான ஒவ்வொரு கதவுகளாக மூடப்படுகின்றன

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்றத் தேர்தல் அடுத்த 4, 5 மாதங்களில் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், மக்கள் மனதில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்கள் பாராளுமன்றத் தேர்வுக்கான நுழைவுத் தேர்வு போல கருதப் பட்ட நிலையில் நுழைவுத் தேர்வு முடிவுகள் வந்தே விட்டன.

ஹிந்தி பேசும் மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் தேர்தல் முடிவுகள் உன்னிப்பாக பார்க்கப்பட்டது. ஏனெனில், இந்த 3 மாநிலங்களில்தான் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் நேரடி போட்டி இருந்தது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த 3 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 65 இடங்களில் பா.ஜ.க. 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ.க.தான் ஆட்சி அமைத்திருந்தது. ராஜஸ்தானில் ஒவ்வொரு தேர்தலிலும், மாறி–மாறி பா.ஜ.க.வும், காங்கிரசும் வெற்றி பெற்றுக்கொண்டிருந்தன. மிசோரமில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியும், புதிதாக உருவான தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியும் இருந்த நிலையில், இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பா.ஜ.க. ஆண்டுகொண்டிருந்த சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. மிசோரம் மாநிலத்தில் இந்தமுறை மிசோ தேசிய முன்னணிகட்சி வெற்றி பெற்றிருக்கிறது. தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கிறது. மத்தியபிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 இடங்களில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் தேவைப்பட்டநிலையில், 3 சுயேச்சைகளும், 2 இடங்களில் வெற்றிபெற்றிருந்த பகுஜன் சமாஜ் கட்சியும் ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளன. 

இந்தத்தேர்தல் முடிவுகள், பா.ஜ.க.வுக்கு பெரிய சறுக்கல் என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில், கடந்த ஆண்டில் இதே நாளில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல்காந்தி பதவியேற்றார். சரியாக ஒரே ஆண்டில் காங்கிரசுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி அவரது தலைமைக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாகும். 

நான்கு நாட்களுக்கு முன்புதான் பா.ஜ.க.வை எதிர்க்க, காங்கிரஸ் உள்பட 21 கட்சிகள் ஓரணியில் நின்று கூட்டம் நடத்தின. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ்யாதவின் சமாஜ்வாடி கட்சியும் அந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இப்போது பகுஜன் சமாஜ் கட்சி மத்தியபிரதேசத்தில் காங்கிரசுக்கு ஆதரவு என்று அதுவும் இந்த அணிக்கு வந்துவிட்டது. இந்த வெற்றியினால் சமாஜ்வாடி கட்சி மற்றும் சில கட்சிகளும் எதிர்க்கட்சிகளின் அணிக்கு வரவாய்ப்பு இருக்கிறது. 

ஹிந்தி பேசும் மாநிலங்களிலேயே பா.ஜ.க. வரமுடியாததற்கு, 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் தாள் செல்லாது என்று வெளியிட்ட அறிவிப்பால், இந்த மாநிலங்களிலுள்ள உழவர்கள் மற்றும் நடுத்தர சாமானிய மக்கள் அடைந்த பெரியபாதிப்பு முதன்மைக் காரணமாக கூறப்படுவாதாகவும், இதுபோல வியாபாரிகள், சிறுதொழில் வைத்திருப்பவர்கள், சரக்குசேவை வரியால் பெரும்பாதிப்பு அடைந்திருக்கிறார்கள் என்பதாகவும், மேலும், வடமாநிலங்களில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு மற்றும் உழவர்களின் விளைபொருட்கள் அனைத்திற்கும் உரியவிலை கிடைக்காததால் உழவர்களின் வாழ்வில் பெரும்துயரம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புற மக்களின் பெருந்துயரும், நகர்ப்புற மக்களின் கோபமுமே பா.ஜ.க.வின் சறுக்கலுக்கு முதன்மையமான காரணம் என காரணங்களை அடுக்கும் அளவிற்கு, பெரிய ஊடகங்கள் மோடியின் மீதிருந்த அச்சத்தை விலக்கிக் கொள்ளத் தொடங்கி விட்டன.

இதற்கு முன்பே ரிசர்வ் வங்கியில் மோடியின் மீதான அச்சம் விலக்கிக் கொள்ளப் பட்டு விட்டது. இன்னும் மோடியின் மீதான அச்சத்தில் வளைந்து கொடுத்துக் கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதிக் கொண்டிருக்கிற அறங்கூற்றுத்துறையும், தேர்தல் ஆணையத்துறையும் அச்சத்தை விலக்கிக் கொள்ளும். கடந்த முறை மோடியின் வெற்றிக்கு சாத்தியமானதே ஊடகம் உள்ளிட்ட மேல்மட்டத் துறையில் மேற்கொள்ளப் பட்ட கருத்துப் பரப்புதல்களே காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. உண்மையில் உணர்வுப் பூர்வமான மக்கள் செல்வாக்கு என்பது மோடிக்கு எப்போதும் இருந்ததே இல்லை. மொத்தத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடப் போவது உண்மை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,001.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.