Show all

சோனியா இல்லத்தின் முன் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

சோனியா இல்லத்தின் முன் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, தில்லியில் உள்ள அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தை பாஜகவினர் திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தடையை மீறிச் செல்ல முயன்ற பாஜகவினர் ஏராளமானோரை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

தில்லியின் ஜாமியா நகரில் உள்ள பாட்லா ஹவுஸ் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, காவல்துறையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இதில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் காவல்துறை அதிகாரி ஒருவரும் பலியானார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அண்மையில் கருத்து தெரிவித்தபோது, அந்த என்கவுன்ட்டர் சம்பவம் போலியானது என்று கூறியிருந்தார்.

அத்துடன் இந்தத் துப்பாக்கிச் சண்டை தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட நடுவண் அரசு தயாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அவரது இந்தக் கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சார்பாக அண்மையில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஐஎஸ் அமைப்பில் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் தோன்றி பேசினர். அதில் ஒருவர், பாட்லா ஹவுஸில் கடந்த 2008ஆம் ஆண்டு காவல்துறையினர் சோதனை நடத்த வந்தபோது தாம் அங்கிருந்ததாகவும், ஆனால் சுதாரித்துக் கொண்டு காவல்துறையினரிடம் பிடிபடாமல் தப்பியோடி விட்டதாகவும் கூறினார்.

அந்தப் பயங்கரவாதியின் இந்த விடியோ உரையாடல், பாட்லா ஹவுஸ் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது.

இதைத் தொடர்ந்து, பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்கக் கோரி தில்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தை பாஜகவினர் திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் ரமேஷ் பிதுரி, உதித் ராஜ், மீனாட்சி லேகி, விஜய் கோயல் உள்பட திரளானோர் கலந்து கொண்டு, காங்கிரஸ் கட்சியைக் கண்டித்தும், காங்கிரஸ் தலைவர்களைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தில்லி மாநில பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய பேசியதாவது:

பயங்கரவாத விவகாரத்தில் காங்கிரஸும், சோனியா காந்தியும் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். ஐஎஸ் அமைப்பால் அண்மையில் வெளியிடப்பட்ட காணொளி மூலம், பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டரில் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டவர்களுக்கு அந்த அமைப்புடன் தொடர்பிருப்பது தெரிகிறது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக கருத்துகளை காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்டதற்காக சோனியா காந்தியும், அவரது கட்சித் தலைவர்களும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது என்றார்.

பாஜக எம்.பி. மீனாட்சி லேகி பேசுகையில்,

பாட்லா ஹவுஸ் பகுதியில் இருந்த பயங்கரவாதி, ஐஎஸ் விடியோவில் தோன்றி பேசியிருக்கிறார்.

இதுபோல 25 முதல் 50 பயங்கரவாதிகளைக் காங்கிரஸ் கட்சி விடுதலை செய்து விட்டது. அவர்கள்தான் தற்போது நாட்டில் பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே பயங்கரவாத விவகாரத்தில் காங்கிரஸின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தவே தற்போது நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

இந்நிலையில், சோனியா காந்தியின் இல்லத்தை முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென அப்பகுதியில் காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்த தடுப்பு அரண்களை உடைத்து கொண்டு முன்னேறிச் செல்ல முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் , ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர், நாடாளுமன்றத் தெரு காவல் நிலையத்துக்கு அவர்களை காவல்துறையினர் கொண்டு சென்றனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.