Show all

தொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளுவதுதானே பாஜக அரசியல்! ஆடுதாண்டும்காவிரிஅணைக்கு அனுமதி வழங்கவில்லை: நடுவண்அரசு

28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி பிரச்சனையில் பாஜக நடுவண் அரசு: பாலுக்கும் காவல், பூனைக்கும் நண்பன் என்பதாக, தமிழகத்திற்கு பாதுகாப்பாய் இருப்பது போலவும், கருநாடகாவை ஏற்றிவிட்டுக் கொண்டிருப்பதையும் வேலையாகக் கொண்டுள்ளது. அந்தவகையாகவே ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்ட அனுமதி தருவதுபோல் தந்து, அப்படியெல்லாம் இல்லை என்று தற்போது அறங்கூற்று மன்றத்தில் பதில் கூறியிருக்கிறது.

ஆடுதாண்டும் காவிரி என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு நடுவண் நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ள தமிழக அரசு, உச்சஅறங்கூற்றுமன்றத்திலும் நடுவண் அரசின் அனுமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு எதிராகவும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. 

இந்த மனுவுக்கு நடுவண் அரசு பதிகை செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அதில், ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்டுவது தொடர்பான திட்ட ஆய்வறிக்கை தயாரிக்க மட்டுமே அனுமதி அளித்து உள்ளோம். இந்த அனுமதி என்பது அணை கட்டுவதற்கு கொடுத்த அனுமதி கிடையாது. எனவே, இது உச்ச அறங்கூற்று மன்றத் தீர்ப்பிற்கு எதிரானது அல்ல. தீர்ப்பை அவமதிக்கும் செயலும் அல்ல. ஆய்வறிக்கை பதிகை செய்த பின்னர், நடுவண் நீர் ஆணையத்தின் நிபுணர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து பார்த்த பின்னரே, அந்த அணை தேவைதானா என்பதை ஆராய்ந்து முடிவு எடுப்பார்கள்.

பின், அந்த அறிக்கை நடுவண் நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஆலோசனை குழுவுக்கு அனுப்பப்படும். இதன் பின் நடுவண் நீர்வளத்துறை அமைச்சகம் திட்டத்தை, காவிரி நீர்மேலாண்மை ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பும். 

ஆகவே இப்போது அளிக்கப்பட்டு உள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு தான். அணை கட்டுவதற்கான அனுமதி அல்ல. ஆடுதாண்டும் காவிரி அணை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்படும். கர்நாடகாவின் கருத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு ஆலோசனை நடத்தப்படாது. உழவர்களின் நலனுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் எந்த முடிவும் எடுக்கப்படாது. 

அணை கட்டுவதற்கான அனுமதியே, வழங்காத போது தற்போது தமிழக அரசு பதிகை செய்த மனு ஆதாரமற்றது. இதனால், தமிழக அரசு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,030.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.