Show all

கொடைக்கானலில் 2 ஆயிரம் அடி பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபரை பிணமாக மீட்டனர்

கொடைக்கானல் மலைப்பகுதியில் புகைப்படம் எடுத்தபோது சுமார் 2 ஆயிரம் அடி பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபரை மீட்பு குழுவினர் பிணமாக மீட்டனர்.

மதுரை, ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 28). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பர்களான மதுரை, ரெயில்வே காலனியை சேர்ந்த ஸ்டேன்லி (29), எல்லிஸ்நகரை சேர்ந்த சதீஷ் ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார்.

அங்கு பல்வேறு பகுதிகளையும் சுற்றி பார்த்த அவர்கள், கடந்த 25-ந்தேதி இரவு அந்த பகுதியில் உள்ள தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அத்துடன் அவர்கள் ஒருவரையொருவர் பாறையில் நின்று செல்போன்களில் படம் பிடித்துள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பாறையில் இருந்து சுமார் 2 ஆயிரம் அடி பள்ளத்தில் கார்த்திகேயன் தவறி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் இதுகுறித்து கொடைக்கானல் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரன் தலைமையில் காவல்துறையினர், தீயணைப்புபடையினர் மற்றும் வனத்துறையினருடன் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்தப் பணிகள் நேற்றுமுன்தினம் மாலை வரை நீடித்த நிலையில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தேடுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதற்கிடையே தகவல் அறிந்து கார்த்திகேயனின் பெற்றோர், உறவினர்கள் கொடைக்கானலுக்கு வந்தனர்.

அவர்கள் கார்த்திகேயனை உயிருடன் மீட்க வேண்டும் என்று கண்ணீர் மல்க காவல்துறையினரிடம் கூறினர். இதையடுத்து தனியார் மீட்பு குழுவினர் உதவியுடன் அவரை தேடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து 10 பேர் கொண்ட மீட்பு குழுவினர் மலையின் அடிப்பகுதியில் உள்ள வௌ;ளக்கவி என்ற கிராமத்திற்கு நேற்று காலை சென்றனர். பின்னர் அங்கிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலைப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள பாறையில் அவர் ரத்தக்கறையுடன் பிணமாக கிடந்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவருடைய உடலை மீட்ட அவர்கள் தொட்டில் கட்டி வௌ;ளக்கவி கிராமத்திற்கு கொண்டு வருவதற்குள் இரவு நேரம் ஆகி விட்டது. மேலும் கொடைக்கானலுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் அவருடைய உடலை கொண்டு வர முடியவில்லை.

இதனால் மீட்பு குழுவினர் பிணத்துடன் அந்த கிராமத்திலேயே தங்கினர். இதையடுத்து அவருடைய உடல் இன்று (வியாழக்கிழமை) கொடைக்கானலுக்கு கொண்டு வரப்படுகிறது. கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.