Show all

ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பின்னரே விலைகுறைக்க சீனாநிறுவனம் முன்வந்தது: தமிழகஅரசு வழக்கு.

எண்ணூர் அனல்மின் நிலைய ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் சீனாவைச் சேர்ந்த சென்ட்ரல் சதர்ன் சீனா எலக்ட்ரிக் பவர் டிசைன் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 23-ந் தேதிக்கு வைக்கப்பட்டுள்ளது. சென்னை எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 யூனிட்டுகள் கூடிய அனல் மின்நிலையம் அமைக்க தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதில் திருச்சியில் உள்ள பாரத மிகுமின் நிறுவனமான பெல் மற்றும் சீனாவைச் சேர்ந்த சென்ட்ரல் சதர்ன் சீனா எலக்ட்ரிக் பவர் டிசைன் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் ஆகியவை பங்கேற்றன. இறுதியாக ரூ. 7,788 கோடியில் புதிய அனல் மின்நிலையம் அமைக்க பெல் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து சீனா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பெல் நிறுவனம் மீது பல்வேறு புகார்களைச் சுட்டிக் காட்டி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரியது சீனா நிறுவனம். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் சீனா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சீனா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுதாகர், வாசுகி ஆகியோர் தமிழக மின்வாரியத்துக்கும் பெல் நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்த ஒப்பந்தம் ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதில், ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பின்னரே ஒப்பந்த விலையைக் குறைக்க சீனாநிறுவனம் முன்வந்ததாக தமிழக அரசு சுட்டிக்காட்டியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சீனா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை நவம்பர் 23-ந் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.