Show all

திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் முற்றுகை! அணிஅணியாய் சூழ்ந்து நிற்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் போராட்டக்காரர்கள்

30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹிந்துத்துவா ஆணாதிக்கவாத குழுவினர்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்த பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் வெளியே வர முடியாதபடி கொச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து அகவைப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உச்ச அறங்கூற்றுமன்றத்தின் உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஹிந்துத்துவா ஆணாதிக்கவாத குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உச்ச அறங்கூற்றுமன்ற உத்தரவு வெளியான பின்பு 2 முறை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோவிலுக்கு வந்த பெண்களை ஹிந்துத்துவா ஆணாதிக்கவாத குழுவினர் தடுத்து நிறுத்தினர். அவர்களை 18-ம் படி ஏற அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் மண்டல, மகரவிளக்கு பூசைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை முதல் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க சுமார் 800-க்கும் அதிகமான இளம்பெண்கள் இயங்கலை மூலம் முன்பதிவு செய்திருந்தனர்.

இளம்பெண்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம், கோவிலின் ஆச்சாரத்தை மீற முயற்சிக்க வேண்டாம் என்று கோவில் தந்திரிகளும், ஹிந்துத்துவா ஆணாதிக்கவாத குழுவினர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை பெண்ணீய ஆர்வலர்கள் ஏற்க மறுத்தனர். மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்திதேசாய், 6 இளம்பெண்களுடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அறிவித்தார்.

அதன்படி, திருப்திதேசாயும், 6 இளம்பெண்களும் புனேவில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் வந்தனர். இன்று அதிகாலை 4.50 மணிக்கு அவர்கள் விமான நிலையம் வந்திறங்கினர். இந்த தகவல் ஹிந்துத்துவா ஆணாதிக்கவாத குழுவினருக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் விமான நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் விமான நிலையத்தின் அனைத்து வாசல்கள் முன்பும் திரண்டு நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்திதேசாயையும், அவருடன் வந்த பெண்களையும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் விமானநிலையத்தில் இருந்து அப்படியே திரும்பிச் செல்ல வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

கொச்சி காவல்துறையினர் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்திதேசாயை அருகில் உள்ள உணவகத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

ஆனால் போராட்டக்காரர்கள் திருப்திதேசாயை திருப்பி அனுப்புவதில் குறியாக இருந்தனர். காலை 9 மணியளவில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பாஜக, ஆர்எஸ்எஸ், உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவை எதிர்க்கும் ஹிந்துத்துவா பெண்கள் அமைப்பினர் என ஆயிரக்க ணக்கானோர் திரண்டனர். சிறை பிடிக்கப்பட்ட திருப்திதேசாய் புனேவிற்கு திரும்பிச் செல்லும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
இதனால் கொச்சி விமான நிலையம் முன்பு பதட்டமும், பரபரப்புமாக இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,973.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.