Show all

தமிழக மீனவர்கள் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக மீனவர்கள் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று நடுவண் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கோவை, திருப்பூர் நகரங்களில் இருந்து தாராபுரம் வரை மாநில நெடுஞ்சாலைகளை 4 வழிச்சாலையாக மாற்றவேண்டும் என்று தாராபுரம், குண்டடம் உள்ளிட்ட 70 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அனுப்பினர்.

இந்த நிலையில், இந்தச் சாலைகளை ஆய்வு செய்ய நடுவண் இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று குண்டடம் வந்தார். குண்டடத்தில் இருந்து 12 கி.மீ., சாலையை ஆய்வு செய்தார். பின்னர் மாமாங்கம் கோயில் வளாகத்தில் நடைபெற்ற கிராம பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்தில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியது:

கோவையிலிருந்து தாராபுரம் வரும் மாநில சாலையும், திருப்பூரிலிருந்து தாராபுரம் வரை வரும் சாலைகளை 4 வழி சாலைகளாக இணைத்து விபத்தில்லா சாலைகளாக மாற்றவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை நடுவண்அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவது வேதனையாக உள்ளது. இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 87 மீனவர்கள் இலங்கை சிறையில் வாடிகொண்டிருக்கிறார்கள். அவர்களையும், அவரது படகுகளையும் மீட்கும் முயற்சியில் உள்ளோம். பிரதமரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விரைவில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் ஒரு தீர்வை பிரதமர் ஏற்படுத்துவார்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.