Show all

தினகரன் குற்றச்சாட்டு! தோல்வி அச்சத்தில் திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்த திமுக முயற்சி

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக வெல்லும் என்ற அச்சத்தில், திமுக தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக, அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் உள்ளிட்ட கழிமுக மாவட்டங்களில் இன்னும் நிவாரணப் பணிகள் முழுமை பெறவில்லை.  மக்கள் இயல்புநிலைக்கு திரும்பாத நிலையில், அங்கு தேர்தல் நடந்தால் மாவட்ட நிர்வாகத்தின் கவனம் முழுவதும் தேர்தலில்தான் இருக்கும். எனவே அங்கு தேர்தல் நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லை என்பதால், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா தேர்தல் ஆணையத்திடம் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தார்.

டி.ராஜாவின் மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம், திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து ஓரிரு நாளில் அறிக்கை அளிக்கும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு கடிதம் அனுப்பியது.

இந்நிலையில், திமுக தேர்தலை நிறுத்த முயற்சிப்பதாக அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தொகுதியின் நிலைமை குறித்து அறிக்கை கேட்டுதான் தேர்தல் ஆணையம் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்திருக்க வேண்டும். அப்படித்தான் அறிவித்திருப்பார்கள். அமமுக தான் இந்த தேர்தலிலும் வெல்லும், என மற்ற கட்சிகள் நினைக்கின்றனர். மக்களின் எழுச்சி தெரிகிறது. அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் தான் வெல்வார் என்ற அச்சத்தில் மற்ற கட்சிகள் உள்ளன.

திருவாரூர் இடைத்தேர்தலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அந்த கட்சி யாருடன் கூட்டணியில் இருக்கிறது? திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரை பேச வைத்தது யார் என தெரியும்.

ஆளும்கட்சி எப்படி பயப்படுகிறதோ அப்படி தலைமையான எதிர்கட்சியான திமுக அறங்கூற்றுமன்றம் வாயிலாக தேர்தலை நிறுத்த பார்க்கிறது. திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்த சொல்லி உச்ச அறங்கூற்றுமன்றத்தில் திமுக மூலமாகத்தான் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தினகரன், திருவாரூரில் எங்களுக்கு யாரும் போட்டி இல்லை. இராகிநகரில் எங்களுக்கு யார் போட்டி?

செயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பின்னர் எல்லா கட்சிகளும் புது கட்சிகள் தான். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். சுயநலத்திற்காக சாணக்கிய தனம் செய்யாத தலைமை, செயலலிதா போன்ற தைரியமான தலைமை வேண்டும் என விரும்புகின்றனர். நாடாளுமன்ற தேர்தலிலும் மாநில கட்சிகளுக்கே வாக்களிக்கும் மனநிலையில் மக்கள் உள்ளனர் என தினகரன் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,024.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.