Show all

5563பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.

234 தொகுதிகளிலும் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மனு தாக்கல் முடிந்ததும் மொத்த மனுக்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

 

சில தொகுதிகளில் கடைசி நேரத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிகமாக வந்ததால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதனால் அந்த தொகுதிகளில் மட்டும் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் நீடித்தது.

இதையடுத்து மொத்த வேட்புமனுக்கள் கணக்கிடப்பட்டு நேற்றிரவு இணையத் தளத்தில் தேர்தல் ஆணையம் தகவல்களை வெளியிடப்பட்டது.

அதன்படி 234 தொகுதிகளிலும் மொத்தம் 7148 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

 

5 முனைப் போட்டி காரணமாக தமிழகத்தில் இந்த முறை தேர்தலில் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 2011- ஆண்டு தேர்தலின் போது 234 தொகுதிகளிலும் 2748 பேர் போட்டியிட்டனர்.

இந்த ஆண்டு அது இரட்டிப்பாக வாய்ப்புள்ளது. பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு அதிகரித்தள்ளது. கடந்த தேர்தலில் 137 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தடவை 797 பெண்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திருநங்கைகள் 4 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர்

 

தமிழ்நாட்டிலேயே அதிக பட்சமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 60 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நேற்று இறுதி நாளின்போது ஆர்.கே.நகர் தொகுதியில் ஏராளமான சுயேட்சைகள் அடுத்தடுத்து வந்து வேட்புமனுக்களைக் கொடுத்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்தப்படியாக சேலம் வடக்கு தொகுதியில் 47 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குமாரபாளையம், துறைமுகம் தொகுதிகளில் தலா 46 பேர், அம்பத்தூர், பெரம்பூர் தொகுதிகளில் தலா 43 பேர், ஆலந்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், மேட்டூர் தொகுதிகளில் தலா 41 பேர் மனு கொடுத்துள்ளனர்.

திருவண்ணாமலையில் 40 பேர் மனு அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் மட்டுமே அதிக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டள்ளன.

 

வேட்புமனுக்கள் அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளால் இன்று காலை 11 மணி முதல் பரிசீலனை  செய்யப்பட்டன. வேட்பு மனுவில் சில வேட்பாளர்கள் கையெழுத்திடாமல் இருந்தது பரிசீலனையில் தெரிய வந்தது. அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டன. பல வேட்பாளர்கள் உரிய ஆவணங்களை சேர்த்து சமர்ப்பிக்காமல் இருந்தனர். குறிப்பாக வரி மற்றும் கட்டண பாக்கி இல்லை    என்பதற்கான ஆவணங்களை  பலரும் கொடுக்கவில்லை.  அந்த வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

 

வேட்புமனுக்கள் பரிசீலனை முழுமையாக காணொளியில் பதிவு செய்யப்பட்டது. மனுக்கள் பரிசீலனையை மேலிடத் தேர்தல் பார்வையாளர்கள் கண்காணித்தனர்.

 

ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும்  முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேட்பு மனு ஏற்று கொள்ளபட்டது. அதேபோல்  திருவாரூர் தொகுதியில் போட்டியிடும்  தி.மு.க தலைவர் கருணாநிதி வேட்புமனு ஏற்று கொள்ளபட்டது.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் வேட்புமனு 

உளுந்தூர்பேட்டை: தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வேட்புமனு 

பென்னாகரம்: பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ்  வேட்புமனு ஏற்றுகொள்ளபட்டன.

விருகம்பாக்கம் தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,

தி.நகர்- எச் ராஜா வேட்பு மனு ஏற்றுகொள்ளபட்டது.

அதுபோல் கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சீமான் மனு ஏற்று கொள்ளபட்டது.

 

நாளை ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வேட்பாளர்கள் உள்ளனர் என்ற விபரம் தெரிய வரும்.

இதைத் தொடர்ந்து வேட்பு மனுக்களை வாபஸ் பெற 2-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்படும்.

அன்று மாற்று வேட்பாளர்கள் உள்பட பலர் மனுக்களை திரும்பப் பெறுவார்கள். இதைத் தொடர்ந்து அன்று மாலையே 234 தொகுதிகளின் வேட்பாளர் இறுதிப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 

தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 5622 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தமிழக தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7148 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் 1585பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 5563  பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.