Show all

கூகுள் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணை

யூடியூப்பில் காணொளிகளைத் பதிவேற்றம் செய்பவர்களின் விபரங்களைக் கண்டுபிடித்து அளிக்க கூகுள் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. எங்கள் நிறுவனம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கூகுள் நிறுவனத்தின் கீழ் செயல்படும் யூடியூப்பில் காணொளி ஒன்று வெளியானது. அந்தக் காணெளியைத் தடை செய்ய வேண்டும் என அந்நிறுவனம் தனது மனுவில் தெரிவித்திருந்தது. அந்த மனு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, யூடியூப்பில் காணொளி பதிவேற்றம் செய்தவர்களின் விபரங்களைக் கண்டுபிடித்து தெரிவிக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். அதற்கு கூகுள் அளித்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் பதிவேற்றம் செய்த காணொளிகளுக்குத் தடை விதிக்க தான் இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. வெளிநாடுகளில் பதிவேற்றம் செய்யப்பட்டால் அதற்குத் தடை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அதை அந்த நாட்டு நீதிமன்றத்தை அணுகி தான் தடை செய்ய முடியும். அதனால் இந்தத் தனியார் நிறுவன காணொளிக்குத் தடை விதிக்க முடியாது என்று அதில் தெரிவித்தது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, பாதிக்கப்பட்டவர்கள் கோரினால் கூகுள் நிறுவனம், நிறுவனக் கொள்கையைக் காரணம் காட்டி விபரங்களைத் தர மறுப்பதை ஏற்க முடியாது. தவறான காணெளி பதிவேற்றம் செய்தவர்கள், வெளிநாடுகளில் இருந்தாலும் முழுமையாக தகவல் தர வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார். திரைப்படங்களைக் கசியவிடுவது, பெண்கள் பற்றிய ஆபாச காணொளிகளை யூடியூப்பில் பதிவேற்றம் செய்பவர்களின் விபரங்களை கூகுள் சேகரித்து சம்பந்தப்பட்டவர்களிடம் அளிக்க வழிவகை செய்துள்ளது நீதிபிதியின் தீர்ப்பு. இதன் மூலம் கண்ட காணொளிகளைப் பதிவேற்றம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.