Show all

மோடிக்கு அண்ணா ஹசாரே வருத்தம் தோய்ந்த மடல்

மக்களவைத் தேர்தலின்போது, தாம் அளித்த வாக்குறுதிகளைப் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்றும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் அவருக்கு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்கும், மோடி ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் தெரியவில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு ஹசாரே எழுதியுள்ள 3 பக்க கடிதம், மும்பையில் வௌ;ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த மக்களவைத் தேர்தலின்போது, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்போம், ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம் என்பன போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்தீர்கள். அவற்றை, நீங்கள் மறந்திருக்கலாம்.

நிறைவேற்றப்படாத அந்த வாக்குறுதிகளை மீண்டும் நினைவூட்டும் வகையில் இக்கடிதத்தை எழுதியுள்ளேன். நான் ஏற்கெனவே எழுதிய பல கடிதங்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டன.

அவை, குப்பைத் தொட்டியில் தான் வீசப்பட்டிருக்கும் என்பதை அறிவேன். எனது தற்போதைய கடிதத்துக்கும் அதே கதி ஏற்படலாம்.

தனக்கு எழுதப்படும் ஒவ்வொரு கடிதத்துக்கும் பிரதமர் பதிலளிப்பது என்பது சாத்தியமில்லை. எனினும், நாட்டுக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒரு சமூக ஆர்வலரின் (ஹசாரே) கடிதத்துக்கு பதில் அளிக்கப்பட வேண்டும்.

நாட்டில் ஊழலைத் தடுக்கும் வகையில், லோக்பால், லோக் ஆயுக்த சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்து, விவசாயிகளின் நலனைக் காக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சியில் ஊழல் மலிந்திருந்தது.

லஞ்சம் கொடுக்காமல் அரசு அலுவலகங்களில் எந்த வேலையும் நடைபெறாத நிலை இருந்தது. தற்போதும் அதே நிலைதான் நீடிக்கிறது. பணவீக்கமும் குறையவில்லை.

நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, என்னிடம் தொலைபேசியில் பேசுவார். வாஜ்பாய் பிரதமராக இருக்கையில், புணே வரும்போது என்னைப் பற்றி விசாரிப்பார்.

மன்மோகன் சிங்கும், எனது கடிதங்களுக்கு பதிலளிப்பார். ஆனால், நீங்கள் என்னைப் புறக்கணித்து வருகிறீர்கள் என்று தனது கடிதத்தில் ஹசாரே கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.