Show all

தமிழர்கள் தரப்பு மிகவும் எச்சரிக்கையுடனும் செயற்றிறனுடனும் செயற்பட வேண்டிய நேரம் இது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கைத் தொடர்பான அறிக்கை, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

அதேசமயம் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணை இன்று வியாழக்கிழமை மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் நிறுவும் ஐ.நா. விசாரணைக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் பிரேரணை அமைந்துள்ளது. இப்பிரேரணையின் நகல்வரைபு ஏற்கனவே உறுப்பு நாடுகளிடம் கையளிக்கப்பட்டு ஜெனிவாவில் பிரத்தியேக பக்க அமர்வுகளில் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.

ஐ.நா. அறிக்கையிலும் அமெரிக்கப் பிரேரணையிலும் உள்ள பரிந்துரைகளில் தமிழ்மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய வலுவான விவகாரம் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம்தான். சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் மூலம் நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு உண்டு. கடந்த காலங்களில் மகிந்த அரசால் இது தொடர்பில் ஏற்படுத்தப் பட்ட உள்ளூர்ப் பொறிமுறைகள் வெறும் கண்துடைப்புச் செயற்பாடுகள் என்பது சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்பே, சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்ற விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

ஆனால் தற்பொழுது இடம்பெற்றுவரும் சமகால அரசியல் நிகழ்வுகள் அமெரிக்கப் பிரேரணை வலுவிழந்து போகுமோ, நீர்த்துப்போகவைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் நாடு இலங்கை. தற்போதைய ஆட்சியாளர்கள் கலப்பு நீதிமன்றப் பொறி முறைமையைக் கடுமையாக எதிர்க்கின்றனர். பிரேரணை வலுவிழந்துபோகும் ஆபத்து ஏற்பட இது தான் காரணமாகியுள்ளது. கடந்த காலங்களைப் போன்று உறுப்பு நாடுகளின் கூடுதலான ஆதரவைப் பெற்று பிரேரணையை நிறைவேற்றும் நோக்கத்துடன் அமெரிக்கா செயற்படுவதும் இதற்கான ஒரு காரணம்.

முன்னைய ஆண்டுகளில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைகளில் இருந்த கடுமையான சொற்பிரயோகங்கள் உறுப்பு நாடுகளின் ஆதரவைக் கூடுதலாகப் பெறும் நோக்கத்துடன் நீக்கப்பட்டதை அல்லது மாற்றம் செய்யப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது. இம்முறையும் இந்த ஆபத்து இருந்து வருகிறது. குறிப்பாக சர்வதேச நீதிபதிகள் அடங்கிய பொறி முறைக்குப் பதிலாக இலங்கை சர்வதேச உதவியுடன் நம்பகரமான உள்ளக விசாரணையை முன்னெடுத்தால் போதுமானது என்று பிரேரணையின் சொற்பதங்கள் மாற்றம் செய்யப்படக்கூடிய ஆபத்து இருப்பதை நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.

அப்படி மாற்றம் செய்யப்படுமானால் நீதி கேட்டு நிற்கும் தமிழ் மக்களுக்கு அது பெரிய ஏமாற்றமாக இருக்கும். நல்லாட்சி அரசு வந்துவிட்டதென இலங்கையின் தற்போதைய அரசைக் கட்டித்தழுவ கங்கணம்கட்டி எதையும் விட்டுக்கொடுக்க  கடந்த காலத்தை மறந்து விடத்தயாராகி நிற்கும் நாடுகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆபத்து நிலையைக்கடக்க நல்லாட்சி முகமூடியைப் போட்டுள்ள இந்த அரசு ஒரு கட்டத்தின் பின் சீனாவை ஓரங்கட்டியதுபோன்று மேற்குலகையும் ஓரங்கட்டி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தற்போதைய அரசின் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே நம்பி பொருளாதார கேந்திர நோக்கங்களின் ஈர்ப்பால் பிடியைத் தகர்த்தினால் மீண்டும் கைக்குள் கொண்டுவருவது கானல் நீராகலாம். பிரதமர் ரணில் நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூற்றொன்றை விடுத்து ஆற்றிய உரையில், உள்ளகப் பொறிமுறை குறித்து தெரிவித்த கருத்துகளை அமெரிக்கப் பிரேரணை வலுவிழப்பதற்கான முதலாவது சமிக்ஞை என்று கருதமுடியும்.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்நாட்டுப் பொறிமுறை மூலமே தீர்வு என்று பிரதமர் மிகவும் ஆணித் தரமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆகவே வெண்ணெய் திரண்டு வரும் நேரம் தாழி உடைந்தது போன்ற நிலைமை இம்முறையும் தமிழருக்கு ஏற்படலாம். தமிழர்கள் தரப்பு மிகவும் எச்சரிக்கையுடனும் செயற்றிறனுடனும் செயற்பட வேண்டிய நேரம் இது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.