Show all

ஆம்பூர் வடபுதுப்பட்டில் பா.ஜ.கவினர் ஆம் ஆத்மி கட்சியினரை விரட்டி விரட்டி தாக்கினர்.

டெல்லி தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. இதற்கு ஆம்ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதற்கு பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி அடுத்தடுத்து டுவிட்டரில் தகவல் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து நடுவண் அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  வேலூர் மாவட்டம் ஆம்பூர் வடபுதுப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள வேலூர் மேற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டு இருந்தனர்.  அதற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதனால் ஆம் ஆத்மி கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

இது குறித்து போலீசாருக்கும் தெரியவந்ததால் ஆம்பூர்  வடபுதுப்பட்டு பகுதியில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

இந்த நிலையில் நேற்று மாலை ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 5 பேர் அங்கு வந்தனர். இதனை அறிந்து ஆவேசம் அடைந்த பா.ஜனதாவினர் ஆம் ஆத்மி கட்சியினரை விரட்டி விரட்டி தாக்கினர்.

கட்சியினர் விரட்டியடிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் வேலூரில் இருந்து ஒரு காரில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆம்பூருக்கு விரைந்து வந்தனர். இதையறிந்த பா.ஜனதாவினர் அந்த காரின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதில் காரில் இருந்த 2 பேர் தாக்கப்பட்டனர். இந்த மோதல் சம்பவத்தில் ஆம் ஆத்மி கட்சி மாவட்ட தலைவர்  பிலால், மாவட்ட செயலாளர் சந்துரு, மாவட்ட துணை தலைவர் பாலாஜி ஆகியோர் காயமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து போலீசார் 2 கட்சியினரையும் அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்தால் ஆம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து பா.ஜனதா கட்சியை சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் தேவநாதன் (40), குப்புசாமி (43), நீலகண்டன் (34), ஏழுமலை (40), சீனிவாசன் (44), ராஜேஷ் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 14 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் பிலால், சந்துரு, பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் காயமடைந்துள்ளதால் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.