Show all

கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் 18பேர் பலி

கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று கட்டுமானப் பணிகளின் போது இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியாகினர். 60க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

 

கொல்கத்தாவின் மொத்த விற்பனை மையமாக திகழும் புராபஸார் பகுதியில் ரபீந்திர சாரணி மற்றும் கே.கே.தாகூர் சாலைகளை இணைக்கும் வகையில் 2.2 கி.மீ. தூரத்துக்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இப்பணி நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் இன்று பிற்பகலில் பாலம் கட்டுமானம் நடைபெற்ற பகுதிகளில் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது.

 

பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதி என்பதால், இடிந்து விழுந்த பகுதியில் 100க்கும் அதிகமானோர் சிக்கிக் கொண்டனர். ஏராளமமான வாகனங்களும் பாலத்துக்கு அடியில் நிறுத்தப்பட்டிருந்ததால், அவைகளும் பலத்த சேதமடைந்தன.

 

இந்த விபத்தில் இதுவரை 18 பேர் வரை இறந்துள்ளதாக மேற்குவங்க மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. காயமடைந்த 62 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இதனிடையே பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐ.வி.ஆர்.சி.எல். நிறுவனம், இந்த விபத்தை ‘கடவுளின் செயல்’  என வர்ணித்துள்ளது.

 

விபத்து நடந்த பகுதியில் 300 ராணுவ வீரர்கள் அடங்கிய 4 படையினரும், பேரிடர் மேலாண்மை படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு மிதினாபுர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மம்தா, அதை ரத்து செய்துவிட்டு கொல்கத்தா திரும்புகிறார்.

 

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கடுமையான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கப்படுகிறது.

 

விபத்து குறித்து கேள்விபட்ட வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இருக்கும் பிரமதர் மோடி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நடுவண் அரசு வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

 

இதனிடையே விபத்து குறித்து மத்திய புலனாய்வு துறை விசாரணை நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்தியுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.