Show all

கூடுதல் பணிச்சுமை காரணமாக ஏர் இந்தியா பெண் ஊழியர் தற்கொலை

கூடுதல் பணிச்சுமை காரணமாக ஏர் இந்தியா பெண் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர் அமித் நாயர். இவர், ஏர் இந்தியா விமானத்தில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குருமித்சிங்பால், மீனம்பாக்கம் ஆசிரியர் குடியிருப்பில் வசிக்கிறார். இவரது மகள் டன்டிரித்சிங்பால் ஏர் இந்தியா விமானத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார். அமித் நாயரும், டன்டிரித்சிங்பாலும் காதலித்து 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மீனம்பாக்கம் ஏர் இந்தியா விமான நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஹாசினி என்ற 2அகவை மகள் உள்ளார். நேற்று காலையில் அமித் நாயர் வேலைக்கு சென்று விட்டார். டன்டிரித்சிங்பாலுக்கு மாலை  4.15 மணிக்கு சென்னையில் இருந்து மஸ்கட் செல்லும் விமானத்தில் வேலை என்பதால் வீட்டில் மகளுடன் இருந்தார். இந்நிலையில் மாலையில் கணவருக்கு போன் செய்து, ஹாசினி எனது பெற்றோர் வீட்டில் இருக்கிறாள்.

நீங்கள் பணி முடிந்ததும் அவளை அழைத்து கொண்டு வீட்டுக்கு செல்லுங்கள் என டன்டிரித்சிங்பால் கூறியுள்ளார். உடனே அவரும் வேலை முடிந்ததும் மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு இரவு சாப்பிட்டு விட்டு மகளுடன் தங்கள் வீட்டுக்குச் சென்றார் அமித் நாயர். அப்போது, வீட்டின் முன்புற கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியுடன் உள்ளே சென்றார். படுக்கை அறை கதவு பூட்டியிருந்தது. கதவைத் தட்டினார். திறக்கவில்லை. போன் செய்து பார்த்தபோது எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்தார். உடனே ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு போன் செய்து கேட்டபோது, ‘பணிக்கு வரவில்லை என தெரிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார். துப்பட்டாவால் மின் விசிறியில் டன்டிரித்சிங்பால் தூக்கில் கிடந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து கதறினார். உடனே டன்டிரித்சிங்பாலை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். உடனே மீனம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து டன்டிரித்சிங்பால் பெற்றோர் கூறுகையில், எங்களது மகள், அவரது கணவருடன் சந்தோஷமாகத்தான் வசித்து வந்தார். சமீப காலமாக கடுமையான பணி சுமையால் அவதிப்பட்டு வந்தார். மேலதிகாரிகள் ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து பணி சுமை வழங்கி வந்தனர். விமானத்தில் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக வேலைக்கு சென்று வந்தால் குறைந்தது ஒரு நாளாவது ஓய்வு கொடுக்க வேண்டும். காலை பணி முடிந்து வந்தால் மாலையில் மீண்டும் வேலைக்கு அழைப்பார்கள். மருமகனுடன் சந்தோசமாகத்தான் வாழ்ந்தார். அவர்களுக்குள் எந்தவித மனகசப்பும் ஏற்பட்டதில்லை. அதிக பணி சுமையே எங்களது மகள் தற்கொலைக்கு காரணம் என்றனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.