Show all

தெற்குத் தொடர்வண்டித் துறையை வெள்ளையர் கொடுத்து விட்டு சென்ற அதே நிலையில் வைத்திருப்பதா! விடுதலை பெற்று 70 ஆண்டுகள் ஆகியும்

21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொடர்வண்டித் துறையில் இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்தே தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையிலும் தமிழகத்திற்கு குறிப்பிட்ட திட்டங்களோ அல்லது பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட நிதியோ இல்லாதது தமிழக மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அளவில் முதன் முறையாக உருவாக்கப்பட்ட தொடர்வண்டித் துறை மண்டலம் தெற்கு தொடர்வண்டித் துறை மண்டலம்தான். வெள்;ளையர்கள் அந்த அளவிற்கு தெற்கு தொடர் வண்டித் துறை மண்டலத்தை சிறப்பாகக் கட்டி வைத்திருந்தார்கள். 

இருப்பினும் பெரிய அளவில் வளர்ச்சி பெறாத மண்டலமாக இன்று வரை புறக்கணிக்கப் பட்டு வருவதும் தெற்கு தொடர்வண்டித் துறைதான். 

இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தொடர்வண்டித் துறைத் துறைக்கு ரூ.64,587 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் மூலதன செலவுகளுக்கான இலக்கு ரூ.1,58,658 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் தெற்கு தொடர்வண்டித் துறைக்கு கடந்த ஆண்டின் நிதி ஒதுக்கீடான ரூ.2932.61 கோடியை விட ரூ.34.28 கோடி குறைவாக ரூ.2,898.33 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்கள், காவிரிப் பாசன மாவட்டங்கள், புதுச்சேரி ஆகியவற்றையும் தலைநகர் சென்னையையும் ஒன்றிணைக்கும் வகையில் கிழக்கு கடற்கரையோர ரயில்பாதை அமைக்கும் பணிக்காக திட்டம் தயாரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்தும் இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்தப் பாதை அமைக்கப்பட்டால் தென்மாவட்டங்களுக்கான பயணிகள் நெரிசல் குறைவதற்கும் அதே வேளையில் மேலும் சுற்றுலா வளர்ச்சி ஏற்படுவதற்கும் காரணமாக அமையும். ஆனால் 10 ஆண்டுகளாக இது வெறும் திட்டமாக மட்டுமே உள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையிலும் இதற்கு நிதி ஒதுக்கப்படாதது தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் ஈரோட்டிற்கு ஒரு தொடர்வண்டிப் பாதையை உருவாக்கினால், வெள்ளையர்கள் நமக்கு விட்டுச் சென்ற ஈரோடு சந்திப்பையும், மற்றும் சேலம் சந்திப்பையும் சுற்றுலா நகரமான மேட்டூருடன் இணைத்து தமிழக வருமானத்தையும், தெற்கு தொடர்வண்டித் துறை வருமானத்தையும் உயர்த்தலாம்.

கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை திட்டத்தின் கீழ் சென்னை மாமல்லபுரம் வழியாக கடலூர் வரையிலான 179 கிலோ மீட்டர் பாதை, திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரையிலான 70 கிலோ மீட்டர் பாதை, திண்டிவனம் முதல் நகரி வரையிலான 179 கிலோமீட்டர்கள் பாதை, 88 கிலோ மீட்டர் தூரம் கொண்ட அத்திப்பட்டு – புத்தூர் வரையிலான பாதை 91 கிலோமீட்டர்கள் அளவுக்கு ஈரோடு பழனி பாதை, தூத்துக்குடி-மதுரை வரையிலான 143 கிலோ மீட்டர் பாதை, 60 கிலோமீட்டர் தூரத்திலான திருப்பெரும்புதூர், இருங்காட்டுகோட்டை. கூடுவாஞ்சேரி வரையிலான பாதை 36 கிலோமீட்டர் தூரம் அளவிலான மொரப்பூர் தருமபுரி பாதை ஆகிய தொடர் வண்டிதடங்களுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டு பனிரெண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப் பட்டு கிடக்கிறது.

849 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்திற்கு ரூ.11,405 கோடிகள் அளவுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த இடைக்கால நிதி நிலை அறிக்கையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள வெறும் 54 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தமிழக மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் தமிழகத்திற்கு மகிழ்ச்சி தரும் அம்சங்கள் இல்லை.

வெள்ளைக்காரன் கொடுத்து விட்டுச் சென்ற தெற்கு தொடர் வண்டித் துறையை அப்படியேதாம் தமிழர்கள் பயன் கொள்ள வேண்டும் என்றால், விடுதலையால் தமிழர்களுக்கு பயன் தருவதுதான் எப்போது? நேற்று காங்கிரஸ், இன்று பாஜக நாளை யார் வந்துதான் என்ன தரப் போகிறார்கள் தமிழகத்திற்கு? 

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,052.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.