Show all

கிரீன்ஃபீஸ் இந்தியா அமைப்பினை மூட நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்டப் பதிவாளர்.

சென்னையை மையமாகக் கொண்டு, கிரீன்ஃபீஸ் இந்தியா அமைப்பின் பதிவு ரத்து செய்யப்படுவதாக, தனது உத்தரவில் சென்னை மாவட்டப் பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

பல்வேறு நிதி முறைகேட்டுப் புகார்கள், அதைத் தொடர்ந்த விசாரணைகளின் விளைவாக இந்தப் பதிவு ரத்து செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, கடந்த 4-ஆம் தேதி அவர் வெளியிட்ட உத்தரவு:

கடந்த 2002- ஆம் ஆண்டு முதல், கிரீன்ஃபீஸ் இந்தியா பதிவு செய்யப்பட்ட அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. சென்னை பெசன்ட் நகரில் அலுவலகம் அமைத்து இயங்கி வந்த இந்த அமைப்பு, பின்னர், கோபாலபுரத்துக்கு இடம்பெயர்ந்தது.

தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் சட்டம் 1975-ன் கீழ், இந்த அமைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சங்க விதியின்படி, குறிப்பிட்ட காலத்தில் நிதி உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால், ஆண்டு பொதுக்குழு கூட்டம் முடிந்த ஆறு மாதங்களுக்குப் பிறகும் அந்த அமைப்பு ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல் இருந்துள்ளது.

இது சங்கங்களின் பதிவுச் சட்டத்துக்கு எதிரானது.

குறிப்பாக, 2004-05, 2005-06 முதல் 2010- ஆம் ஆண்டு வரையில் ஆவணங்கள் ஏதும் தாக்கல் செய்யப்படாமல் உள்ளது.

இந்த அமைப்புக்கு 2004-ஆம் ஆண்டு முதல் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடையாக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்று அவை செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிரீன்ஃபீஸ் இந்தியா அலுவலகத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தின் அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த ஆய்வின் போது, பல்வேறு விதிமீறல்களும், ஒழுங்கீனங்களும் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வு கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதே மாதம் 16-ஆம் தேதியன்று அந்த அமைப்பின் பதிவினை ஏன் ரத்து செய்யக் கூடாது எனக் கேட்டு நோட்டீஸ் பிறக்கப்பட்டது.

இதற்கு கிரீன்ஃபீஸ் இந்தியா அமைப்பிடம் இருந்து ஜூலை 3ஆம் தேதி வரப்பெற்ற கடிதத்தில், மேலும் கால அவகாசம் கேட்டதுடன், அதில் தெரிவித்த விளக்கங்கள் முறையாக இல்லை.

சங்கங்களின் பதிவுச் சட்டத்தின்படி, முறையான நிதி வரவுகள் குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால், கிரீன்ஃபீஸ் இந்தியா அமைப்பு சரியான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை. இது, சட்ட விதிகளுக்கு முரணானது.

எனவே, கிரீன்ஃபீஸ் அமைப்புக்கு வழங்கப்பட்ட பதிவானது ரத்து செய்யப்படுகிறது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு மாத காலத்துக்குள் கிரீன்ஃபீஸ் இந்தியா அமைப்பே, தனது பதிவினை ரத்து செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

அப்படிச் செய்யத் தவறினால், பதிவாளரின் சார்பிலேயே தனியான அதிகாரி நியமிக்கப்பட்டு, கிரீன்ஃபீஸ் இந்தியா அமைப்பினை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது உத்தரவில் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.