Show all

உச்ச நீதிமன்றத்திலும் அன்புமணி மனு விசாரணைக்கு ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது

முன்னாள் நடுவண் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸுக்கு எதிராக சிபிஐ தொடுத்துள்ள இரண்டு வழக்குகளுக்கு தடை விதிக்கக் கோரி, அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்காமல் உச்ச நீதிமன்றம் வௌ;ளிக்கிழமை நிராகரித்தது.

அன்புமணியின் மனுவை பரிசீலித்த நீதிபதிகள் டி.எஸ். தாக்குர், வி.கோபாலகௌடா ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்வழக்குகளின் குற்றச்சாட்டுகள் சிபிஐ நீதிமன்றத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த வழக்குகளுக்குத் தடை விதிக்க உத்தரவிட முடியாது. இக்கோரிக்கையை விசாரணை நீதிமன்றத்திலேயே மனுதாரர் (அன்புமணி) முன்வைக்கும்படி அறிவுறுத்துகிறோம். எனவே, மனுவை விசாரணைக்கு அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டனர்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், நடுவண் சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் 2004, மே முதல் 2009, ஏப்ரல் வரை பதவி வகித்தார்.

அப்போது மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் உள்ள ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றின் மாணவர்கள் சேர்க்கையில் விதிகளை மீறி அன்புமணி ராமதாஸ் செயல்பட்டதாக சிபிஐ இரண்டு வழக்குகளைத் தொடுத்துள்ளது.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை அரசியல் காரணங்களுக்காக சிபிஐ மூலம் மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு தொடுத்ததாக அன்புமணி வாதிட்டு வருகிறார். இந்நிலையில், இரு வழக்குகளிலும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய சிபிஐ நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதற்குத் தடை கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்த மனு கடந்த மாதம் 20-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது உச்ச நீதிமன்றத்திலும் அவரது மனு விசாரணைக்கு ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.