Show all

கடும் பரபரப்பில் இந்தியா! மோடி திருடர்தான் என்று ராகுல் கீச்சு!! அனைத்திற்கும் காரணம் ராபேல் ஊழலை உறுதிப்படுத்தும் ஒரு கடிதம்

27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதெல்லாம் இனி பிரச்சனை கிடையாது என்று பாஜகவால் ஓரங்கட்டப்பட்ட ரபேல் ஊழல் விவகாரத்தை ஒரு கடிதம் உயிர்பெற செய்து இருக்கிறது. ரபேல் ஊழல் குற்றச்சாட்டு ரபேல் ஒப்பந்தத்தில் காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டுகள்: 

1.பாஜக அரசு 126 விமானங்களுக்கு பதில் 36 விமானங்களை மட்டும் வாங்கியுள்ளது. ஆனால் அதை காங்கிரஸ் நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு பாஜக வாங்கியுள்ளது. 

2.இந்த ஒப்பந்தம் எச்எல்ஏக்கு பதிலாக ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு விமானத்தின் விலை 41விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை அடுக்கி, ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் பொதுநல வழக்கு தொடுத்தனர். 

ஆனால் தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய், அறங்கூற்றுவர்கள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இதை தள்ளுபடி செய்தது. குற்றச்சாட்டிற்கு போதிய அடிப்படை இல்லை என்று அறங்கூற்றுமன்றம் கூறியது. 

இந்த நிலையில் வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் ஆகியோர் வரிசையாக மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணை விரைவில் தொடங்க இருக்கிறது. 

இந்த நிலையில்தான் தி இந்து ஆங்கில நாளேட்டில் இதழியலாளர் என்.ராம் எழுதி வெளியான கட்டுரை திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் வெளியான ரபேல் கடிதம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ரபேல் ஒப்பந்தம் நடந்த போது, ஒப்பந்த அதிகாரிகள் சார்பாக, அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கருக்கு எழுத்தப்பட்ட கடிதம்தான் பிரச்னைக்கு காரணம். இந்தக் கடிதத்தை வைத்துதான் தி இந்து நாளேடு கட்டுரையை எழுதியுள்ளது. இந்தக் கடிதம் ஏன் முதன்மைத்துவம் பெறுகிறது என்றால், இது தலைமைஅமைச்சர் மீது குற்றஞ்சாட்டி, பாதுகாப்பு அமைச்சருக்கு எழுதப்பட்ட கடிதம் ஆகும். 

ரபேல் ஒப்பந்த பேச்சுவார்த்தைக்காக அரசு அமைத்து இருந்த ஒரு குழுவுக்கு தான் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரம் இருக்கிறது. இந்த குழு இல்லாமல் இந்தியாவில் இருந்து யாராவது பேச்சுவார்த்தையை நடத்தினால், அது முறைகேடானது, தவறானது. ஆனால் இந்த தவறை செய்திருப்பது தலைமைஅமைச்சர் மோடி என்றுதான் அந்த கடிதத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 

இந்த கடிதத்தில், ராபேல் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்கள் சார்பில் பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் தலைமைஅமைச்சர் மோடி இன்னொரு பக்கம் தனியாக ரபேல் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நாங்கள் செய்யும் ஒப்பந்தத்திற்கு எதிராக தலைமைஅமைச்சர் மோடியின் பேச்சுவார்த்தை இருக்கிறது. 

இதனால் பாதுகாப்பு துறை இதில் தலையிட்டு, இந்த தலைமைஅமைச்சரின் தனிப்பட்ட பேர பேச்சுவார்த்தையை தடுத்து நிறுத்த வேண்டும். தலைமைஅமைச்சரோ அவரது அலுவலகமோ பேச்சுவார்த்தைக் குழுவிற்கு எதிராக பேச்சுவார்த்தை நடத்துவது தவறானது. இது ஒப்பந்த விதிமுறைக்கு எதிரானது என்று, அந்த கடிதத்தில் தலைமைஅமைச்சர் மோடிக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த நிலையில் ரபேல் ஊழல் வழக்கில், உச்சஅறங்கூற்றுமன்றத்தில் நடுவண் அரசு பதிகை செய்த ஆவணம் ஒன்றில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றுள்ளது. ஆனால் அதில் வசதியாக, தலைமைஅமைச்சர் மோடி, தனியாக நடத்திய பேச்சுவார்த்தையை நடுவண் அரசு மறைத்து இருக்கிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அரசு பொய் சொல்லி உள்ளது. மேலே குறிப்பிட்ட அந்த கடிதத்தை எழுதியவர் பாதுகாப்பு துறை அதிகாரியாக இருந்த ஜி மோகன்குமார். 

தலைமைஅமைச்சர் மோடி, தனியாக ரபேல் தொடர்பான பேரத்தை நடத்துகிறார். இது முறையானது கிடையாது. பாதுகாப்பு துறை இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த ஒரு கடிதம்தான் தற்போது அனைத்து பிரச்சனைக்கும் காரணம். 

ஏற்கனவே பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலண்டே, தலைமைஅமைச்சர் மோடிதான் ரபேல் ஒப்பந்தத்தை எச்ஏஎல்லுக்கு பதில், ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க சொன்னார் என்று கூறினார். தற்போது, தலைமைஅமைச்சர் மோடி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்காகத்தான் இப்படி தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால்தான் ஒப்பந்தம் கைமாறியது என்று புகார் எழுந்து இருக்கிறது. 

அதேபோல் இந்தியாவின் பேச்சுவார்த்தைக் குழு இருக்கும்போதே அதை மதிக்காமல் தலைமைஅமைச்சர் செயல்பட்டதால்தான், ஒரு விமானத்தின் விலை ஏகபோகத்திற்கு ஏற்றப்பட்டு இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தை உள்ளே கொண்டு வர பிரான்ஸ் ஒப்புக்கொண்டதே, விலை ஏற்றம் என்ற கோரிக்கையை வைத்துத்தான். அதனால் மோடியின் பேரம் மூலம் ரிலையன்ஸ் உள்ளே வந்து, அதன்முலம் விமான விலை ஏற்றப்பட்டு, அதன்மூலம் இந்தியாவிற்கு நட்டம் ஏற்பட்டது. 

இதனால் என்ன பிரச்சனை மோடி பேச்சுவார்த்தைக் குழுவை மதிக்காமல் பேரம் பேசியது என்ன தவறா? என்று கேட்டால், ஆம் தவறுதான் என்கிறார்கள் வல்லுநர்கள். ஏனென்றால் எந்த ஒரு இந்திய தலைமைஅமைச்சரும் இதற்கு முன் இப்படி நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு எதிராக பேரம் பேசியது கிடையாது. ஆனால் தலைமைஅமைச்சர் மோடி பேரம் பேசியது மட்டுமில்லாமல், அந்த ஒப்பந்தம் கைமாறவும் ஒரு வகையில் காரணமாக இருந்தார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்தக் கடிதம் இன்று காலையில் தீயானது. அடுத்த 20 நிமிடத்தில் ராகுல் காந்தியிடம் இருந்து ஒரு கீச்சு வந்தது. இந்தியா ராணுவத்தின் சகோதர சகோதரிகளே.. நீங்கள்தான் எங்கள் பாதுகாவலர்கள்., உங்கள் வாழ்க்கையை எங்களுக்காக அர்பணித்துள்ளீர்கள், நீங்கள்தான் எங்கள் பெருமை.. ரபேல் ஊழல் குறித்து இன்று காலை 10.30 மணிக்கு பேசுகிறேன், என்று கூறினார். 

அதேபோல் பேசிய ராகுல் காந்தி, மோடி மீது பரபர குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மோடி ஒரு திருடர், மோடி அனில் அம்பானிக்காக திருடிவிட்டார், நிர்மலா சீதாராமன் பொய் சொல்லிவிட்டார் என்று பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். உண்மையில் இந்தப் பேட்டி, ராகுலின் அதிக பரபரப்பை ஏற்படுத்திய பேட்டிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் பேட்டி முடிந்த சில நிமிடத்தில் நாடாளுமன்றமும் முடங்கியது. ரபேல் ஒப்பந்தத்தை கையில் எடுத்த காங்கிரஸ் பெரிய அளவில் அமளி செய்தது. காங்கிரஸ் மட்டுமில்லாமல் மற்ற எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக அமளியில் ஈடுப்பட்டது. ரபேலால் மீண்டும் ஒரு முறை நாடாளுமன்றம் மொத்தமாக முடங்கியது. 

துலைமைஅமைச்சர் மோடி நேற்றுதான் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்களவையில் ஒரு மணி நேரம் பேசினார். ஆனால் இன்று அதற்கான சுவடே இல்லாமல் போய்விட்டது. ஆம் நேற்று மோடி பேசியது இரண்டு நாளுக்காவது விவாதிக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் இன்று காலையே ரபேல் பிரச்சனை மீண்டும் வந்து மோடியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. 

இந்த விசயத்தால் காலை ஏழு மணியில் இருந்து இந்தியா முழுக்க இருக்கும் பல்லாயிரக்கணக்கான செய்தியாளர்கள் பெரும் பரபரப்பிற்கு உள்ளாகி உள்ளார்கள். அடுத்தடுத்த செய்திகளால் பெரும் பரபர சூழ்நிலை நிலவி வருகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,058.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.