Show all

ஐயப்பனை வணங்கிய சாதனைப் பெண்கள் 51 பேர்கள் பாதுகாப்புக்கு மாநில அரசு பொறுப்பு! உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பு

04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை வணங்கிய சாதனைப் பெண்கள் கனகதுர்கா மற்றும் பிந்துவுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், அனைத்து அகவைப் பெண்களும் செல்ல அனுமதிக்கலாம் என, உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால், 10முதல் 50 அகவையுள்ள பெண்களை அனுமதிக்க விடாமல், பாஜக ஹிந்துத்துவாவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாரம்பரியத்தின் பெயரில் கடைபிடிக்கப் பட்டு வந்த பாலின பாரபட்சத்தைத் தகர்த்து, அண்மையில் இரண்டு பெண்களை, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, மாநில அரசு, காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது. 

மேலும் இந்தப் பெண்கள், பலத்த பாதுகாப்புடன், அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீட்டுக்குச் சென்ற, கனகதுர்காவை, அவரது மாமியார் தாக்கியதால், தலையில் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, இந்த இரண்டு பெண்கள் சார்பிலும், உச்ச உச்சஅறங்கூற்றுமன்றத்தில்  மனு பதிகை செய்யப்பட்டது. மனு, தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண்களின் பாதுகாப்புக்கு மாநில அரசு தான் பொறுப்பு. இதுவரை ஐயப்பனை வணங்கிய பெண்களுக்கு, போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரள காவல்துறையினருக்கு உச்சஅறங்கூற்றுமன்றம்  உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கேரள அரசு சார்பில் பதிகை செய்யப்பட்ட மனுவில் தமிழகத்தை சேர்ந்த 24 பெண்கள் உட்பட 51 பெண்கள் இதுவரை சபரிமலையில் ஐயப்பனை வணங்கியதாகக் கூறப்பட்டு உள்ளது. ஐயப்பனை வணங்கிய பெண்களின் விவரத்தையும் பதிகை செய்துள்ளது.

ஒரு பக்கம் நடுவண் அரசில் ஆளும் கட்சியாக இருக்கிற பாஜகவே, பாலின பாரபட்சத்திற்கு ஆதரவாகவும், அறங்கூற்று மன்ற உத்தரவை அவமதிக்கும் வகையிலும், தொடர்ந்து ஈடுபட்டு வருவது, மாற்றுக் கட்சி ஆளும் மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் முயற்சியே என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,036.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.