Show all

மாநிலக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாளகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலக் கல்லூரியில் மாணவர் சங்கத் தேர்தலை 15 நாட்களுக்குள் நடத்த வேண்டும், போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 2 மாணவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கு பயிலும் மாணவர்கள் கல்லூரி வாளகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர் சங்கத் தேர்தலை நடத்தக்கோரி மாணவர்கள் முதல்வர்  வரும் நேரத்தில் கல்லூரிக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது கல்லூரிக்கு வந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.

அப்போது, போராட்டத்திற்குக் காரணமாக இருந்த கோபிநாத், ஜெயசிங் ஆகிய இரண்டு பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர்.

இந்நிலையில், இன்று மாநிலக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாளகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர். அப்போது,

மாணவர் சங்கத்தேர்தலை 15 நாட்களுக்குள் நடத்த வேண்டும்,

சாலை மறியலின்போது கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்,

மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

மாணவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ள கல்லூரி நிர்வாகம், கல்லூரியில் பயிற்சி தேர்வு நடைபெறுவதால் போராட்டத்தைக் கைவிடுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. போராட்டம் தொடர்ந்தால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வருவதால் கல்லூரி வாளகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.