Show all

அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க...

அலகாபாத்தில் வள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்-

தமிழகத்தில் ஏற்கனவே  நிறுவப்பட்டுள்ள சிலைகளையே ஏதோ  ஒரு காரணத்தைச் சொல்லி உள்நோக்கத்தோடு அகற்றுவதற்கான முயற்சிகள், மறைமுகமாக நடைபெற்று கொண்டிருக்கும் இந்த வேளையில்தான், உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் நகரிலே திருவள்ளுவர் சிலை ஒன்றினை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

இது போன்ற மற்றொரு பிரச்சினை, வார இதழில் வந்துள்ளது. அதில், தமிழ்ச்சங்க இலக்கிய நூல்கள் பதினெட்டை வைதேகி ஹெர்பெர்ட் என்ற அமெரிக்கர்  ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.   அவரை, க.அன்பழகனின் உறவினரும், தற்போது அமெரிக்காவில்  சிறந்த இதய மருத்துவராகப் பணியாற்றி வருபவருமான டாக்டர் ஜானகிராமன் சந்தித்து, தன் வாழ்நாளில் தமிழுக்காகச் சிறப்பு செய்ய நினைப்பதாகவும், என்ன செய்யலாம் என்றும் கேட்டபோது,  “உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை கிடையாது, அப்படி ஓர் இருக்கை அமையுமானால் தமிழுக்குப் பெருமை, தமிழர்களுக்கும் பெருமை” என்று ஹெர்பர்ட் கூறியதால், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, ஹார்வர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர்களோடும், துறைத் தலைவரோடும் அமெரிக்காவாழ் மருத்துவர்கள் ஜானகிராமனும், திருஞான சம்பந்தமும் அணுகிப் பல முறை பேசிய பின்னர்,  ஹார்வர்டு பல்கலைக் கழகம் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

இதற்கான முதலீடு ஆறு மில்லியன் டாலர்கள் (சுமார் 40 கோடி ரூபாய்); இதை இரண்டு ஆண்டு கால அவகாசத்துக்குள் திரட்ட வேண்டும். மருத்துவர்கள் ஜானகி ராமனும், திருஞானசம்பந்தமும் இணைந்து  ஒரு மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளார்கள். மீதித்தொகையைத் திரட்ட உலகத் தமிழ்ப் பற்றாளர்கள் அதற்கான  முயற்சியிலே ஈடுபட்டுள்ளார்கள் என்று “அந்த வார இதழ் எழுதியுள்ளது.   

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் 30 மில்லியன் மக்கள் பேசும் “உக்ரேனிய“ மொழிக்கே இரண்டு இருக்கைகளும், 1.5 மில்லியன் மக்கள் தொகை மட்டுமே பேசக் கூடிய  “செல்டிக்“ மொழிக்குக் கூட அங்கே இருக்கைகள் இருக்கும்போது, ஹிப்ரு, சமஸ்கிருதம் போன்ற மற்ற மொழிகளுக்கும் அங்கே இருக்கைகள் இருக்கும்போது, சுமார் 80 மில்லியன் மக்கள் பேசும் செம்மொழியாம் தமிழ் மொழிக்கு அங்கே இருக்கை உருவாக  வேண்டாமா?

எனவே உத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமையவும்,

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமையவும்,

ஆர்வலர்கள் சிலர் மேற்கொண்டுள்ள முயற்சிகளைத் தமிழக அரசு ஊக்குவித்து உரிய முறையில் ஆதரவு அளித்திட  வேண்டும்.

தமிழின் மேன்மையைப் பரப்பிடும்  இத்தகைய சிறப்பான செயலில் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி அவர்கள் வற்புறுத்தியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.