Show all

நடிகர் சங்கத்துக்குள் பிளவை உண்டாக்குகிறார் விஷால் என்கிறார் நடிகர் சிம்பு

ஒரே குடும்பமாகத் திகழும் நடிகர் சங்கத்துக்குள் பிளவை உண்டாக்குகிறார் விஷால் என்று நடிகர் சிம்பு தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை நடிகர் சிம்பு செய்தியாளர்களிடம்,

நான் பதினான்கு வயதிலிருந்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளேன். நடிகர் சங்கத்தில் நடந்து வரும் அத்தனைச் செயல்பாடுகளும் எனக்குத் தெரிந்தவைதான். இப்போது சரத்குமார் அணியின் பக்கம் நான் நிற்பதற்கு காரணம், உண்மை அந்தப் பக்கம் இருக்கிறது.

நடிகர் சங்கம் ஆண்டாண்டு காலமாக ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால் அந்த ஒற்றுமை இப்போது சீர்குலையும் அபாயத்தில் உள்ளது. எனக்கு நடிகர் சங்கத்தில் எந்த ஒரு பதவியும் தேவையில்லை. ஆனால் நான் குடும்பமாக நினைக்கும் நடிகர் சங்கத்தில் பிரிவினையை ஏற்படுத்த நினைப்பவர்களை விடமாட்டேன்.

சரத்குமார் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். நடிகர் சங்க வளாகத்தில் புதிய கட்டடம் கட்ட வேண்டும். நலிந்த நடிகர்களுக்கு வருமானம் ஈட்டித் தர வேண்டும் என்ற காரணங்களை முன்வைத்துதான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் முடிந்தவுடன் அந்த வளாகம் நடிகர் சங்கத்தின் வசம் வந்துவிடும்.

இவ்வாறான நிலையில் அந்த ஒப்பந்தத்தின் மீது குற்றம் சுமத்த என்ன காரணம், விஷாலின் கோபத்துக்கு யார் காரணம் என்பதெல்லாம் புதிராகவே உள்ளது.

நடிகர் சங்கப் பொதுக் குழுவின்படிதான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அப்போதெல்லாம் கேள்வி கேட்காத விஷாலுக்கு இப்போது கேள்வி கேட்க என்ன அருகதை உள்ளது?

விஷால் ஒரு சூழ்ச்சியான வலையை விரித்துள்ளார். அதில் நாசர், பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்ட நல்லவர்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம். விஷாலிடம் நடிகர் சங்கத்தை ஒப்படைத்துவிட வேண்டாம் என்றார் அவர்.

செய்தியாளர்களைச் சந்திக்கும்போது நடிகைகள் ராதிகா சரத்குமார், ஊர்வசி, பூர்ணிமா பாக்கியராஜ், நடிகர்கள் பாக்யராஜ், மோகன்ராம் உடனிருந்தனர்.

தேர்தலை முன்வைத்து நடிகர் சங்கத்துக்குள் பிரிவினை வேண்டாம்; நடிகர்கள் எப்போதும்போல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட தமிழ்த்திரை அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. இது குறித்து இரு தரப்பையும் வரும் 11-ஆம் தேதி அழைத்துப் பேச முடிவு செய்யப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.