Show all

ஒற்றைக்கண்’ முல்லாஉமர் 2013-ம் ஆண்டே இறந்து விட்டார்

தலீபான் தலைவர் ‘ஒற்றைக்கண்’ முல்லாஉமர் 2013-ம் ஆண்டே இறந்து விட்டார் என்றும் அவரது மரணத்தை  2 ஆண்டுகளாக தலீபான் தீவிரவாத இயக்கம் மறைத்து வைத்து உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தானில் இரும்புக்கரம் கொண்டு ஆட்சி நடத்தி வந்தவர் தலீபான் தலைவர், ‘ஒற்றைக்கண்’ முல்லா உமர். நியூயார்க் உலக வர்த்தக மையம், அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் ஆகியவற்றின் மீது விமானங்களை மோதி தாக்குதல் நடத்திய அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தந்ததற்காக, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து முல்லா உமர் ஆட்சிக்கு முடிவு கட்டியது.

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் முல்லா உமர் வெளியே தோன்றவில்லை. அவர் இறந்து விட்டதாகவும், உயிரோடு இருப்பதாகவும் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் முல்லா உமர் 2, 3 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டதாக பி.பி.சி. நிறுவனம், திடீரென செய்தி வெளியிட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது குறித்த மேல் விவரங்களோ, அதிகாரப்பூர்வ தகவல்களோ வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தான் அரசு உறுதிசெய்தது.

இருப்பினும் பாகிஸ்தான் எங்களது நாட்டில் முல்லா உமர் மரணம் அடையவில்லை என்று கூறியதும் மீண்டும் குழப்பம் நீடித்தது. தலிபான் தீவிரவாத இயக்கத்தில் இருந்தும், முல்லா உமர் மரணம் அடைந்துவிட்டார் என்றும் இல்லை என்றும் மாறுபட்ட தகவல்களே வெளியாகியது.

இந்நிலையில் தலீபான் தலைவர் ‘ஒற்றைக்கண்’ முல்லாஉமர் 2013-ம் ஆண்டே இறந்து விட்டார் என்றும் அவரது மரணத்தை  2 ஆண்டுகளாக தலீபான் தீவிரவாத இயக்கம் மறைத்து வைத்து உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஓமரின் மரணத்தை கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்த தலீபான்கள், புதிய தலைவராக முல்லா அக்தர் மன்சூர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அறிவித்தனர். ஆனால் முகமது ஓமர் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதியே உயிரிழந்ததாக தற்போதைய தலைவர் மன்சூரின் சுயசரிதையில் கூறப்பட்டு உள்ளது. ஓமர் மறைந்ததும், தலீபானின் முக்கிய தலைவர்கள் சிலர் கூடி, இந்த தகவலை குறைந்தது 2 ஆண்டுகளுக்காவது ரகசியமாக வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம், ஆப்கனில் முகாமிட்டிருந்த நேட்டோ படைகள் 2014-ம் ஆண்டு இறுதியில் தங்கள் படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்து இருந்தனர். எனவே 2013-ம் ஆண்டு தலீபான்களுக்கு முக்கிய ஆண்டாக அமையும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போதைய தலைமையின் மீது ஓமரின் மகன் மற்றும் சகோதரர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. மேலும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் ஆப்கனில் பரவி வருவதால், ஓமரின் மரணத்தை அறிவித்து புதிய தலைமையை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக அதில் கூறப்பட்டு உள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.