Show all

இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மோடி அரசு நிதி உதவியுடன் ஆம்புலன்ஸ் சேவை

இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் வளமான எதிர்காலத்துக்காக இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இந்திய அரசு நிதி உதவியுடன் (ரூ.50 கோடி) கூடிய ஆம்புலன்ஸ் சேவை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: இந்திய அரசு வழங்கி வரும் ஒத்துழைப்பு காரணமாக, இலங்கையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அது மக்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப அமைய வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். அந்த அடிப்படையில்தான் உதவி வருகிறோம். இதுபோன்ற திட்டங்களால் மக்கள் பயனடைவதுடன் பிராந்திய அளவிலான நட்பும் வளர்ந்து வருகிறது. இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் வளமான எதிர்காலத்துக்காக இந்தியா உறுதுணையாக இருக்கும். இது தான் நம் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவின் குறிக்கோளாக உள்ளது. இந்த நட்புறவுக்கு இப்போது தொடங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் சேவை சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேசும்போது, இரு நாடுகளுக்கும் இடையே நூறாண்டுகளுக்கும் மேலாக வர்த்தக மற்றும் கலாச்சார ரீதியிலான உறவு நீடித்து வருகிறது. இதை மேலும் வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.