Show all

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று முதல் படிப்படியாக உயரத்தொடங்கி உள்ளது

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது நேற்று மாலை 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை ஒட்டியபடி தண்ணீர் செல்கிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் அருவிகளில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் கூடாது என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லில் போலீசார், தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று முதல் படிப்படியாக உயரத்தொடங்கி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 128 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது 16 ஆயிரத்து 568 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 91.18 அடியில் இருந்து 91.39 அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 13 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்குமானால் அணையின் நீர்மட்டம் மேலும் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.