Show all

கல்விக் கடன் வழங்குவதற்கு புதிதாக ஒரு இணையதளத்தைத் தொடங்கியுள்ளது நடுவண் அரசு

நடுவண் நிதி அமைச்சகம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு புதிதாக ஒரு இணையதளத்தைத் தொடங்கி யுள்ளது. இந்த இணைய தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி ஐடிபிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வித்யலட்சுமி எனும் இணையதளம் தொடங்கப்பட்டது. கல்விக் கடனை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களின் நலனுக்காக இந்த இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த இணையதளத்தை உருவாக்கி இதை நிர்வகிக்கும் பணியை என்எஸ்டிஎல் மேற் கொள்ளும். நிதி அமைச்சகம், உயர் கல்வித்துறை, மத்திய மனித வளத்துறை மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி இந்த இணையதளம் நிர்வகிக்கப் படும். நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் மாணவர் களுக்கு தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் கல்விக் கடன், கல்வி உதவித் தொகை ஆகியன வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது பிரதம மந்திரியின் வித்யலட்சுமி கார்யகிரம் (பிஎம்விஎல்கே) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்றார்.

இந்த திட்டத்தின் பிரதான நோக்கமே, போதிய நிதி வசதி இல்லாத காரணத்தால் தனது மேற்படிப்பை தொடர முடிய வில்லை என்ற நிலை எந்த ஒரு மாணவனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான். இந்த இலக்கை எட்டுவதன் முதல் படியாக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இந்த இணையதளத்தில் வங்கிகள் கல்விக் கடனுக்கு ஒதுக்கி யுள்ள திட்டங்கள், அது குறித்த தகவல்கள், விண்ணப் பங்கள் மற்றும் அரசு அளிக்கும் கல்வி உதவித் தொகை (ஸ்காலர் ஷிப்) பற்றிய தகவல்கள் அனைத்தும் இடம்பெறும். வித்யலட்சுமி இணைய தளமானது, மாணவர் களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனைத்து தகவல்களும் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த மாணவர்களது விண்ணப்பங்கள் எந்த கட்ட பரிசீலனையில் உள்ளது என்ற விவரமும் இடம்பெறும்.

இதுவரையில் 13 வங்கிகள் இந்த இணையதளத்தில் சேர பதிவு செய்துள்ளன. அவை அளிக்கும் 22 வகையான கல்விக் கடன் பற்றிய விவரமும் இந்த இணையதளத்தில் உள்ளன. எஸ்பிஐ, ஐடிபிஐ வங்கி, யூனியன் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் தங்கள் இணையதளத்தை இந்த இணையதளத்துடன் இணைத்துள்ளன. மாணவர்களின் கல்விக் கடன் பரிசீலனை பற்றிய விவரத்தை இந்த வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பித்தவர்கள் அது எந்த நிலையில் உள்ளது என்ற விவரத்தை இணையதளத்திலேயே அறிந்து கொள்ள முடியும்.

இணையதளம் உருவாக்கப் பட்டதால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பயனடைவர் என நிதி அமைச்சகம் நம்புகிறது. மேலும் வங்கிகள் அளிக்கும் கல்விக் கடன் பற்றிய தகவலை ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் அறிந்து பயன்பெற இது உதவும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித் துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.