Show all

காஷ்மீர் பிரிவினைவாத இயக்க தலைவர்களை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தான்

காஷ்மீர் பிரிவினைவாத இயக்க தலைவர்களை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் இந்தியா- பாகிஸ்தான், இடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

கடந்த மாதம் ரஷ்யாவில் பிரதமர் நரேந்திர மோடி - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இடையே நடந்த சந்திப்பின் போது, பயங்கரவாத பிரச்னைகளுக்கு தீர்வு காண இருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கக்ளிடையே ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அதே நாளில் (ஆகஸ்ட் 23) காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்களையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு பாகிஸ்தான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆஜிஸ் அழைப்பு விடுத்துள்ளார். சையது அலிஷா கிலானி, யாசின் மாலிக் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாக்., பாதுகாப்பு ஆலேசகரின் இந்திய வருகை குறித்து நவாஸ் உடன் பாக்., ராணுவ தளபதி உளவுத்துறை தலைவர் ஆகியோர் ஆலோசித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தையின் போது பிரிவினைவாத இயக்க தலைவர்களுடன் பாகிஸ்தான் ஆலோசித்ததன் காரணமாகவே வெளியுறவுத்துறை செயலாளர்கள் அளவிலான அந்த பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டும் பிரிவினைவாத இயக்க தலைவர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.