Show all

ராஜீவ்கெலை வழக்கில்

ராஜீவ்கெலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர். இதையடுத்து ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து நடுவண் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி தமிழக அரசு, தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தது. அதில், 7 பேரையும் விடுதலை செய்ய அரசு எடுத்த முடிவு சரியானது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நடுவண் அரசு தனது எழுத்துப்பூர்வ வாதத்தை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், இவ்வழக்கை சி.பி.ஐ.தான் முழுமையாக விசாரித்தது என்றும், குற்றவாளிகளை தன்னிச்சையாக மாநில அரசு விடுதலை செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

தண்டனைக் குறைப்பு பெற்றவர்களை விடுவித்தால் அவர்கள் இரட்டை பலன் பெறுவார்கள் என்றும், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண ஓட்டத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் மத்திய அரசு தனது வாதத்தில் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.