Show all

ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்

திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள சிபிஐ- மத்திய புலனாய்வுத்துறை, அவர் மீது வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளது. ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, ராஜாவின் உறவினர் பரமேஷ்குமார், அவரது நெருங்கிய கூட்டாளி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் சில தனியார் நிறுவனங்களையும் இணைத்து மொத்தமாக 16 பேர் மீது இந்தக் குற்றவழக்கு இன்று புதன்கிழமை பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பின்னணியில், 20 இடங்களில் சி.பி.ஐ. சோதனைளையும் நடத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள 16 பேரின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் நடைபெற்ற இந்த சோதனைகள், டில்லி, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, சென்னையில் மட்டும் 6 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ-யின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த 16 பேரின் பெயர்களில் உள்ள வங்கி சேமிப்பு கணக்குகளும், வங்கி வைப்புத்தொகை கணக்குகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சிபிஐ கூறுகிறது.

ஏற்கனவே ஆ.ராசா உள்ளிட்டோர் மீது சிபிஐ தொடுத்துள்ள 2-ஜி அலைக்கற்றை குற்ற வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த புதிய வழக்கு பதியப்பட்டுள்ளது.

2-ஜி வழக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டிலும் தனி வழக்கு ஒன்று ஆ.ராசா உள்ளிட்டோர் மீது பதியப்பட்டுள்ளது.

இந்தப் பணமோசடி வழக்கில் கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தரப்பில் 200 கோடி ரூபா பணம் வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அதனால் ஆ.ராசாவை தவிர இந்த வழக்கில் கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீதும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இந்த மூன்று வழக்குகளின் விசாரணைகளும் டில்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.