Show all

மத்திய வேளாண் அமைச்சகச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தது

ஆழ்கடல் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலோர காவல் படை மற்றும் மத்திய மீன் வளத்துறையிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யாத மத்திய வேளாண் அமைச்சகச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தது.

சென்னை மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் எல்.டி.ஏ.பீட்டர் ராயன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் மத்திய விவசாய, கால்நாடை, மீன்வளத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந் தேதி ஆழ்கடல் மீன் பிடிப்பு குறித்து புதிய விதிமுறை, கட்டுப் பாடுகளை விதித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில், ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீன்பிடி படகுகள் 15 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்க வேண்டும். அந்த படகுகள், ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்கு முன்பு மத்திய விவசாயம், மீன்வளம் துறை அமைச்சகத்திடமும், கடலோர காவல் படையினரிடமும் முன் அனுமதி பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறை இந்திய மீனவர்களுக்கு எதிராக உள்ளது. நாட்டில் உள்ள 72 ஆயிரம் மீன் பிடி படகுகளில் 80 சதவீதம் படகுகள் 15 மீட்டருக்கு அதிகமான நீளம் கொண்டதாக உள்ளது. தற்போது மத்திய அரசின் இதுபோன்ற உத்தரவு மீனவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும், வெளிநாட்டு மீனவர்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட வழிவகை செய்யும் விதமாக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பி.முராரி விசாரணை கமிட்டி, ஆழ்கடல் மீன் பிடிப்பது தொடர்பான கொள்கையை உருவாக்கியுள்ளது. அந்த கமிட்டியின் பரிந்துரையின்படி, ஆழ்கடலில் மீன் பிடிக்க முன் அனுமதி தேவையில்லை.

மீன்பிடித் தொழிலில் வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்கினால், மீன் பிடி உரிமம் புதிதாகவோ, அல்லது உரிமத்தை புதுப்பிக்கவோ கூடாது. மீன் பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம், மீனவர்களுக்கு நிதி உதவிகள் வழங்க வேண்டும் என்பது உட்பட 21 பரிந்துரைகளை செய்துள்ளது.

இந்த பரிந்துரைகளை மத்திய அமைச்சரவையும் கடந்த 1996-ம் ஆண்டு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், முராரி கமிட்டி பரிந்துரைக்கு எதிராக தற்போது, கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு மீன் பிடித் தொழிலுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே, இந்த விதிமுறைகள் கொண்ட உத்தரவை ரத்து செய்யவேண்டும். மீனவர்களின் நலன் காக்கும் முராரி கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, இந்த வழக்கு மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான உதவி கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார். ஆனால், இதை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு பல முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை பதில் மனு தாக்கல் செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், வழக்கு விசாரணை பாதிக்கப்படுகிறது. எனவே, மத்திய வேளாண்மைத்துறை செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் வழக்குச் செலவு (அபராதம்) விதிக்கிறோம். இந்த வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 22-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.