Show all

இன்று சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்ட

இன்று சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சுதந்திர தினம், நாளை கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல், டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார். அவர் அங்கு தேசிய கொடி ஏற்றுவது, இது 2-வது முறை ஆகும்.

சமீபத்தில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரிலும், காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

40 ஆயிரம் போலீஸ் இதை கருத்தில் கொண்டு, டெல்லி நகரம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், துணை ராணுவப்படையினர் மற்றும் டெல்லி போலீசார் 12 ஆயிரம் பேர் ஆவர். அவர்கள், விழா நடைபெறும் செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் நிறுத்தப்படுகிறார்கள்.

செங்கோட்டை அருகே உள்ள உயர்ந்த கட்டிடங்களில், குறிபார்த்து சுடும் வீரர்கள் நிறுத்தப்படுகிறார்கள். போக்குவரத்து போலீசார், வழக்கம்போல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவுக்கு கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. பிரதமர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், செங்கோட்டைக்கு வரும் வழிநெடுகிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். செங்கோட்டையைச் சுற்றிலும் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படுகிறது.

விழா நடைபெறும் மைதானத்துக்குள், தண்ணீர் பாட்டில், செல்போன், தொலைநோக்கி, குடை, ரிமோட் கண்ட்ரோல் கார் சாவி, கைப்பை, சூட்கேஸ், டிரான்சிஸ்டர், சிகரெட் லைட்டர், டிபன் பாக்ஸ் ஆகியவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.