Show all

மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதம்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு, பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப்போவதாக கடந்த 20 ஆண்டுகளில் 5 முறை வாக்குறுதி அளித்தவர் கருணாநிதி. இந்தக் காலத்தில் 10 ஆண்டுகள் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்திருக்கிறார். ஆனால், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவில்லை. இப்போது வெளியிட்டுள்ள மதுவிலக்கு அறிவிப்புக்கு மக்கள் மீது கொண்ட உண்மையான அக்கறை காரணமா? அல்லது சட்டமன்றத் தேர்தல் காரணமா? என்பது தெரியவில்லை.

உடனடியாக மது ஆலைகளை மூட முடியாது என நீங்கள் அறிவித்திருப்பதன் மூலம் மக்கள் நலனை விட அடுத்த 10 மாதங்களில் உங்கள் கட்சியினருக்கு கிடைக்கவிருக்கும் ரூ.15,000 கோடி வருவாய் தான் முக்கியம் என்பதை வெளிப்படுத்தி விட்டீர்கள். தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 16.2 லட்சம் லிட்டர் மது விற்பனை செய்யப்படுகிறது. இதில் 50 சதவீதத்தை தி.மு.க. சார்பு ஆலைகள் தான் தயாரிக்கின்றன. தமிழகத்தில் மது குடிப்பதால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அதில் தி.மு.க. சார்பு ஆலைகள் தயாரிக்கும் மதுவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேர்.

மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் ஏன் 10 மாதம் காத்திருக்க வேண்டும்? உடனடியாக தி.மு.க. சார்ந்த மது ஆலைகளை நாளையே மூட ஆணையிடுங்கள். குறைந்தபட்சம் 15-ம் தேதியாவது மூடி மதுவின் கொடுமைகளிலிருந்து மக்களுக்கு விடுதலை கொடுங்கள்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.