Show all

ஏழு மாதங்களில் 41 புலிகள் இறந்துவிட்டதாக புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் புலிகளை பாதுகாக்க நடுவண் அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி வருகின்றன. இதற்காக பல நூறு ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் பழங்குடி மக்களைக் கட்டாயப்படுத்தி அவர்களின் பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றுகிறது அரசு.

ஆனால் தற்போது தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரையிலான 7 மாதங்களில் 41 புலிகள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இதற்கு இயற்கை மரணத்துடன், வேட்டையாடப்படுதல், தொடர்ச்சியாக புலி - மனிதர்கள் எதிர்கொள்ள நேரிடுவதால், மனிதர்களின் பாதுகாப்புக்காக புலிகள் சுட்டுக் கொள்ளப்படுவதும் முக்கிய காரணங்கள் என தெரியவந்துள்ளது.

புலி பாதுகாப்பு திட்டங்களுக்கு தூதராக நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஆனால் காடுகளின் பரப்பளவு அதிகரிக்காமல், புலிகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகரிக்க முயற்சிப்பது எதிர்மறையான விளைவுகளையே தரும் என்றும், மேலும் காடுகளை பாதுகாப்பதில் காட்டில் வசிக்கும் பழங்குடி மக்களை ஈடுபடுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.