Show all

சசிபெருமாள் உடலை வாங்க மறுத்தஉறவினர்கள்

சசிபெருமாள் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி முன்பு பகல் 12.45 மணிக்கு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களுடன் அங்கு திரண்டு இருந்த அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் அங்கு விரைந்து வந்தார். அவர் அரசியல் கட்சி நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது சசிபெருமாள் கூறியபடி டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும், அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவாதம் தரப்பட வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

இதுபற்றி பேசி முடிவெடுக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார். மேலும் குமரி மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் கோவில் மற்றும் பள்ளி, கல்லூரிகள் அருகே டாஸ்மாக் கடைகள் இருக்கிறது என்ற பட்டியலை நீங்களே தயாரித்து கொடுங்கள், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அரசியல் கட்சியினர் மறியலை கைவிட்டனர்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் சசிபெருமாள் உறவினர்களை அழைத்து சமரசம் பேசினார். அவர்களிடம் குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை சசிபெருமாளின் சகோதரர் செல்வம் ஏற்க மறுத்தார். எனது சகோதரர் குமரி மாவட்டத்துக்காக மட்டும் போராடவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தான் போராடினார். எனவே தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்ற உறுதி மொழி அளிக்கப்பட்டால் தான் சசிபெருமாள் உடலை வாங்குவோம், ஆனால் நீங்கள் அந்த உறுதிமொழியை அளிக்க மறுப்பதால் நாங்கள் அவரது உடலை வாங்காமலேயே சேலம் புறப்படுகிறோம். எங்கள் ரத்த சொந்தங்கள் யாரும் சசிபெருமாள் உடலை வாங்க மாட்டோம், எங்கள் பெயரை சொல்லி வேறு யாராவது சசிபெருமாள் உடலை பெற்று கொண்டால் அதுபற்றி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றார்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் சசிபெருமாள் உடலை வாங்காமலேயே சேலம் புறப்பட்டுச் சென்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை பகல் 1 மணி வரை நீடித்தும் பலன் அளிக்கவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.