Show all

அதிமுக அரசு மீது விஜயகாந்த் புகார்

அதிமுக அரசு ஏட்டிக்குப் போட்டியாக செயல்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தேமுதிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மற்றும் பல்வேறு சமூகநல அமைப்புகளும் ஒருமித்தகுரல் கொடுத்தும், அதிமுக அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது. மதுக்கடைகளை மூடக்கோரினால் “ஏட்டிக்குப் போட்டியாக”, சகல வசதிகளுடன் கூடிய “எலைட்” மதுக்கடைகளை திறக்க அரசு முயற்சிப்பதும், மது விற்பனையை மேலும் அதிகரிக்க உயர் அதிகாரிகளை கொண்டு மண்டல வாரியாக கூட்டம் நடத்துவதும் என்ன நியாயம்?

சுமார் ஆயிரத்து முந்நூறு அரசு பள்ளிகளை மூடுவதாக செய்திகள் வருகின்றன. அதிமுக அரசு அதை தொடர்ந்து நடத்த தேவையான நடவடிக்கை எடுக்காமல், மதுவினால் சீரழிந்துகொண்டுள்ள தமிழகத்தை, மேலும் சீரழிக்க முயற்சிக்கலாமா?

தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வரலாறு காணாத வகையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து, உயர் அதிகாரிகளைக்கொண்டு மண்டல வாரியாக கூட்டம் நடத்தி, குடிநீர் தேவையை சமாளிக்க உரியநடவடிக்கையை தமிழக அரசு ஏன் எடுக்கவில்லையென பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.