Show all

யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட யாகூப் அப்துல் ரசாக் மேமனுக்கு, கடந்த 2007ம் ஆண்டு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், யாகூப் மேமனின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், தண்டனையை குறைக்கக் கோரி, யாகூப் மேமன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது கோரிக்கையை இன்று நிராகரித்தது.

தூக்கு தண்டனை உறுதியானதை தொடர்ந்து, வரும் 30ம் தேதி காலை 7 மணிக்கு நாக்பூர் சிறையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பை பலப்படுத்துமாறு, மகாராஷ்டிர அரசை, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.