Show all

நடுவண் மாநில அரசுகளுக்கு கவனஅறிக்கை! முற்பட்ட வகுப்பினருக்கான 10விழுக்காட்டு இடஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக வழக்கு

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: முற்பட்ட வகுப்பினருக்கான 10விழுக்காட்டு இடஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் நடுவண், மாநில அரசுகள் 2 கிழமைகளில் பதிலளிக்க சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சமுதாயத்தினருக்கு 10விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடுவண் அரசு பதிகை செய்தது. இதற்கான ஒப்புதலை குடியரசு தலைவரிடம் பெற்றது. 

இந்த மசோதாவுக்கு முதன்;மையான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆதரவை தந்துள்ளது. ஆனால் திமுக, அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பைக் காட்டினார்கள். கடுமையாக விமர்சித்து தங்களது ஆதங்கத்தை இரு அவைகளிலும் கொட்டினார்கள். சட்டமன்ற கூட்டத்தில் கூட 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை எதிர்த்து ஸ்டாலின் பேசினார். ஆனாலும் எதிர்ப்புக்களையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டு தற்போது சட்டமாகி விட்டது. இந்த நிலையில் இதை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

'முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் கண்டிப்பாக பாதிப்பு ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. அதனால் இந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் பொருளாதாரம் என்பது அடிப்படையில் மாறக்கூடியது. எனவே அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என வாதம் செய்யப்பட்டது. மேலும் சமூகரீதியில்தான் இடஒதுக்கீடு தர வேண்டும் என்றும் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது. 

10விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து 2 கிழமைக்குள் நடுவண், மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி 2 கிழமைக்கு அறங்கூற்றுவர்கள் வழக்கை ஒத்திவைத்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,039.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.