Show all

‘வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல’ உச்ச நீதிமன்றம் கருத்து

‘வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல’ ஜெயலலிதா வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

 

     உலகமே மிகச் சில பணக்காரர்கள் வசம் உள்ளது என்கிற உண்மையெல்லாம் புறந்தள்ளி,

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக பணம் என்பதை தீண்டத்தகாததாய் நினைக்கும் மனப்போக்கு  இந்தியர்களிடம் குறிப்பாக-சிறப்பாக தமிழர்களிடம் இருந்து வரும் நிலையில்

அறிவு ஜீவிகளும் ஊடகவியலர்களும்,

‘வருமானத்திற்கு மீறி சொத்து சேர்ப்பது குற்றமல்ல’

என்கிற தகவலை எப்படித்தான் செரிமானம் செய்து கொள்ளப் போகின்றனரோ தெரியவில்லை.

     ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது குற்றமல்ல என்றும், பணம் வரும் வழி தவறாக இருந்தால் மட்டுமே அது குற்றம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று இறுதி வாதம் தொடங்கியது.

 

முதலில் கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தனது வாதத்தை முன்வைத்தார். அப்போது, வழக்கின் முக்கிய அம்சங்களை சுருக்கமாக விவரித்து ஆச்சார்யா வாதிட்டார். அவரது வாதத்திற்குப் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள்,      ‘வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது எப்படி குற்றமாகும்.

அது குற்றமல்ல.

வருகிற வருமானம் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இருந்தால்தான் அது குற்றம்.

மேலும் இந்த சொத்துக்களை வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் ஜெயலலிதாவுடையது என்று நிரூபிக்க முடியுமா?

அதற்கு என்ன ஆதாரம் உள்ளது?’

என்று  கேட்டனர்.

ஆச்சார்யா வாதிடுகையில், வருமான வரியைக் கட்டி விட்டதாக கூறி ஜெயலலிதா தப்ப முயற்சிப்பதாகவும், வருமான வரியைக் கட்டுவதால் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததை நியாயப்படுத்த முடியாது என்றும், இதுகுறித்து வருமான வரித்துறை தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்கும் என்றும் கூறினார்.

இதன்பிறகு வாதத்தில் சில சந்தேகங்களை நீதிபதிகள் எழுப்பினர். குறிப்பாக,

‘ஜெயலலிதாவுக்கு லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் சசிகலா பினாமி நிறுவனங்களை நடத்தியதாக கூறியுள்ளீர்கள். ஆனால் அந்தப் பணம் ஜெயலலிதாவுக்கு உரியது என்பதற்கு ஆதாரம் என்ன?

ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கணித தவறு காரணமாக அதை தவறவிட்டுவிட்டதாகவும் வாதிட்டீர்கள்.

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறும் நீங்கள், அது சட்ட விரோதமான வகைகளில் சேர்க்கப்பட்ட பணமா என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா?’

என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கடைசியாக வாதிட்ட ஆச்சார்யா, 

‘எனது வழக்கறிஞர் தொழிலில் இது மறக்க முடியாத தருணம். நான் இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் விளக்கிக் கூறி விட்டேன். இந்த வழக்கைப் பொறுத்தவரை விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

(ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தலா 4 ஆண்டு சிறை, ரூ.100 கோடி அபராதம்) செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்பதே எனது கடைசி கோரிக்கை.

இந்த வாதத்திற்கு அனுமதி அளித்த பெஞ்சுக்கு நன்றி’

என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.

 

அதைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்த வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி தனது தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தார். 

 

இதையடுத்து, நிறுவனங்களின் வழக்கு விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

அன்றைய தினம் நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், கர்நாடக அரசு தரப்பு தனது வாதத்தை முன்வைக்க உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.