Show all

மீண்டும் வனிதா- பிக்பாஸ் நிகழ்ச்சி மீது மக்கள் கடுங்கோபம்! எல்லாம் பொய், முழுவதும் நாடகம், மக்கள் தீர்ப்புக்கு தருகிற மரியாதையா இது

வனிதாவை மீண்டும் போட்டியாளராக அறிவித்துள்ளதன் மூலம் மக்களை முட்டாளாக்கி இருக்கிறார் பிக் பாஸ் என்பதாக, இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை ஈடுபாட்டோடு பார்த்து வந்த மக்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.  

04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக் பாஸ் வீட்டில் முதல் கிழமையிலிருந்தே பரபரப்பைக் கிளப்பியவர் வனிதா. பிக்பாஸ் நாடகத்திற்கு கடைசிவரை தேவைப்படுகிற மிகச்சரியான நபர்தான் வனிதா. முதல் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பல்வேறு அலப்பறைகளை கூட்டினார். எல்லாப் பிரச்சினைகளிலும் தலையிட்டு, அதை ஊதி பெரிதாக்கி பிரச்சினை மேல் பிரச்சினைகளை வரவைத்தார். இதனால் பிக் பாஸ் வீடே சந்தைக்கடை போல தான் காட்சியளித்தது.

பிக்பாஸ் நாடகத்திற்கு கடைசிவரை தேவைப்படுகிற மிகச்சரியான நபர், மக்கள் வாக்குகளுக்கு மதிப்பளித்து மூன்றாவது கிழமையே வெளியேற்றப்பட்டது மக்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது ஒரு நம்பிக்கையை வரவழைத்தது. இதனால் அப்பாடா என மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இனி, பிக் பாஸ் வீட்டில் பிரச்சினைகள் இருக்காது என நினைத்திருந்தபோது, சிறப்பு விருந்தினராக மீண்டும் உள்ளே அழைத்து வரப்பட்டார் வனிதா.

சரி ஒருகிழமை தங்கிவிட்டு போய்விடுவார் என பார்த்தால், மறுபடியும் அவரைப் போட்டியாளர் ஆகி விட்டார் பிக்பாஸ் நிகழ்ச்சியில். ஆனால் மக்கள் வாக்களித்து வெளியே அனுப்பிய ஒருவரை மறுபடியும் போட்டியாளராக தேர்வு செய்ய பிக் பாஸ் குழுவினர் எப்படி முடிவு செய்தார்கள் என்பது அதிர்ச்சியாக உள்ளது. கடந்த இரண்டு பருவங்களிலும் இதுபோல் நடந்தது இல்லை. இதனால் பிக் பாஸ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் மக்கள்.

ஒவ்வொருமுறை கமல் பேசும் போதும், பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை மக்கள் தான் எல்லா முடிவையும் எடுக்கிறார்கள் என பேச்சுக்கு பேச்சு கூறுகிறார். ஆனால் மக்களின் தீர்ப்புக்கு கமலும், பிக் பாசும் மதிப்பளிக்கவில்லை என்பது தானே உண்மை.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மெய்மைநிகழ்ச்சியே இல்லை. எல்லாமே நாடகம் தான் என்ற கருத்து பரவலாக உள்ளது. வனிதாவை மீண்டும் போட்டியாளராக்கி இருப்பதன் மூலம் அதை உண்மை என நிரூபித்திருக்கிறார் பிக் பாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது வெறும் இலக்குதரத்திற்காக, பணம் சம்பாதிப்பதற்காக நடத்தப்படும் ஒரு கதைவசன நாடகம் மட்டுமே.

கமல் சொல்வது போல் இதில் எந்த சமூக பொறுப்புணர்வும் இல்லை என்பது தெளிவாகிறது. மக்கள் விரும்பிதான் வனிதாவை மீண்டும் உள்ளே கொண்டு வந்தார்கள் என்றால், மக்களுக்கு காரணம் தெரிவிக்காமலேயே வெளியேற்றிய மதுமிதாவையும் அதேபோல் மீண்டும் அழைத்து வருவார்களா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,251.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.