Show all

ரூ.2 கோடி பணம் கேட்டு தேனாம்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கடத்தல்.

ரூ.2 கோடி பணம் கேட்டு தேனாம்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவனைக் கடத்திய காதலியின் தாய் உள்பட 4  பேர் கைது.

மகளைக் காதலிப்பது போல நடிக்க வைத்து பணம் பறிக்க தனது காதலன் மதன் என்பவருடன் திட்டமிட்டது அம்பலம்.

சென்னை, போயஸ்கார்டன், எண்.87, என்ற முகவரியைச் சேர்ந்த ரவிசுந்தரம் என்பவர் மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது 2வது மகன் அபிஷேக் (19) என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. இரண்டாமாண்டு படித்து வருகிறார். தற்போது தனது படிப்பை விட்டு விட்டார். கடந்த 03,1,02015 அன்று இரவு, அபிஷேக் தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லையென்றும். இந்நிலையில் மறுநாள் (04.1.2015) அதிகாலை சுமார் 03.45 மணியளவில், ரவிசுந்தரத்தின் மனைவியின் கைபேசி எண்ணை தொடர்பு கொண்ட மர்மநபர் தங்களது மகன் அபிஷேக்கை கடத்தி வைத்திருப்பதாகவும் அவரை விடுவிக்க தங்களுக்கு ரூ.2 கோடி பணம் தரவேண்டும்.

காவல்துறையில் புகார் கொடுத்தாலோ அல்லது பணம் கொடுக்கவில்லையென்றாலோ தங்களது மகன் அபிஷேக்கை உயிரோடு பார்க்க முடியாது எனக் கூறி இணைப்பை துண்டித்துவிட்டதாகவும். ஆகவே கடத்தல்காரர்களிடமிருந்து தனது மகன் அபிஷேக்கை மீட்டுத்தரும்படியும் ரவிசுந்தரம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேற்படி வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்து கல்லூரி மாணவன் அபிஷேக்கை பத்திரமாக மீட்க சென்னை  பெருநகரக் காவல் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டதன்பேரில் தியாகராயநகர் துணை ஆணையர் சரவணன் நேரடி மேற்பார்வையில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்நிலையில் அபிஷேக்கை கடத்திய நபர்கள் ரவிசுந்தரத்திடம் கைபேசியில் பேசி தாங்கள் கேட்ட பணத்துடன் அவர்கள் சொல்லும் இடத்திற்கு வரும்படி கூறியுள்ளனர். அதனடிப்படையில் ரவிசுந்தரம் இன்று (05,1,02015) அதிகாலை பணத்துடன் தனது காரில் புறப்பட்டார், அவரை பின்தொடர்ந்து  தனிப்படை போலீசார் வெவ்வேறு வாகனங்களில் மாறு வேடத்தில்; பின்தொடர்ந்து சென்றனர், ரவிசுந்தரத்தின் கார் பல்லாவரம், ரேடியல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது 2 இன்டிகோ கார்கள் மேற்படி ரவிசுந்தரத்தின் காரை பின் தொடர்வதை கவனித்த தனிப்படையினர், மேற்படி 2 இன்டிகோ கார்களையும் தடுத்து நிறுத்தினர். அப்பொழுது முன்னால் வந்த இன்டிகோ கார் வேகமாக வந்ததால் நிறுத்தாமல் செல்ல திரும்பியபோது சாலையில் உருண்டது. அதிலிருந்த 1.சதாம்உசேன்,  2. அகமது பெகாத், 3.ரிஸ்வான் ஆகியோர் பிடிபட்டனர்.

பின்னால் வந்த இன்டிகோ காரில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவன் அபிஷேக் பத்திரமாக மீட்கப்பட்டதுடன்; உடனிருந்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த குர்ஸித் என்ற பெண் (42) என்பவர் கைது செய்யப்பட்டார்.

பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில். வளசரவாக்கத்தைச் சேர்ந்த மதன் (30) ரவிசுந்தரத்திடம் வீட்டு வேலைகளை செய்து தற்போது நின்றுவிட்டார். ரவிசுந்தரம் வீட்டில் பணப்புழக்கம் அதிகம் இருந்ததால், மதன் தனது காதலி குர்ஸித்துடன் சேர்ந்து ரவிசுந்தரத்திடமிருந்து பணத்தை பறிக்கத் திட்டமிட்டு, கைது செய்யப்பட்ட குர்ஸித்திடம் கூறவே, குர்ஸித் தனது மகளை அபிஷேக்கை காதலிக்க வைப்பது போல நடிக்க வைத்துள்ளார். சமயம் பார்த்துக்கொண்டிருந்த மதன் மற்றும் குர்ஸித் ஆகியோர் அபிஷேக் கடந்த 3ம் தேதி அன்று இரவு விருந்துக்கு செல்ல இருப்பதை தெரிந்து கொண்டு அன்று கடத்த திட்டமிட்டு, மேற்படி நபர்களுடன் அபிஷேக்கை கடத்தியது தெரியவந்துள்ளது.

மேற்படி கடத்தலில் ஈடுபட்ட குர்ஸித் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்திற்கு முக்கிய காரணமான தலைமறைவாக உள்ள குற்றவாளி மதன் மற்றும் மேலும் சிலரை பிடிக்க தனிப்படை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.