Show all

காவல்துறையினர் தன்னிடம் கேட்ட 35 கேள்விகளுக்கு சிம்பு விளக்கம் அளித்தார்

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக கோவை காவல்துறையினரிடம் சிம்பு இன்று காலை ஆஜரானார். காவல்துறையினர் கேட்ட 35 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். நடிகர் சிம்பு பாடிய ஆபாச பாடலுக்கு பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சிம்பு, இந்தப் பாடலுக்கு இசையமைத்த அனிரூத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல தரப்பினர் போராட்டம் நடத்தினர். மாதர் சங்கம் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சிம்பு, அனிருத் மீது புகார் கொடுக்கப்பட்டன. இதையடுத்து, 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். நேரில் ஆஜராக இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் அனிரூத் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

 

நேரில் ஆஜராக காலஅவகாசம் கேட்டு சிம்பு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வரும் 24ம் தேதிக்குள் சிம்பு ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் நேற்று இரவு திடீரென கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு வந்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜை சந்தித்து வழக்கு விவரங்களைக் கேட்டறிந்தார். சிம்பு ஆஜர்படுத்தப்பட்டால் கைது செய்யப்படுவரா என்பது குறித்தும் ஆஜராக கால அவகாசம் வழங்க முடியுமா என்பது குறித்தும் கேட்டறிந்தார். சுமார் அரை மணி நேரம் அங்கிருந்துவிட்டு புறப்பட்டு சென்றார். இந்நிலையில், நடிகர் சிம்பு இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து பீளமேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். பின்னர் அங்கிருந்து காட்டூர் காவல் நிலையத்தில் அவரது வக்கீலுடன் ஆஜரானார். காவல்துறையினர் அவரிடம் கேட்ட 35 கேள்விகளுக்கு சிம்பு விளக்கம் அளித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.