Show all

நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதிப் பட்டியலில் 61 வேட்பாளர்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதிப் பட்டியலில் 61 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2015-18-ஆம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

நடிகர் சரத்குமார் தலைமையிலான அணியினரும், நடிகர் நாசர் தலைமையிலான அணியினரும் தேர்தலில் களம் காண உள்ளனர்.

இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 3-ஆம் தேதி வரை நடைபெற்றது.

தேர்தல் அதிகாரி ஈ.பத்மநாபன் முன்னிலையில்

இரு அணியினரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை, வேட்பு மனுக்களை வாபஸ் வாங்குவதற்கான காலக் கெடு முடிவடைந்ததையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வியாழக்கிழமை (அக்.8) வெளியிடப்பட்டது.

சரத்குமார் அணி, நாசர் அணி, சுயேச்சைகள் உள்ளிட்ட 61 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

தலைவர் பதவிக்கு சரத்குமார், நாசர் இருவரும் போட்டியிடும் நிலையில் சிவசாமி என்பவரும் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளார்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு நாசர் அணியின் சார்பில் கருணாஸ், பொன்வண்ணன் இருவரும் போட்டியிடுகின்றனர்.

சரத்குமார் அணியின் சார்பில் விஜயகுமார், சிம்பு இருவரும் போட்டியிடுகின்றனர்.

இதைத் தவிர, மோகன்குமார் என்ற சுயேச்சை வேட்பாளரும் போட்டியிடுகின்றார்.

பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவி, விஷால் இருவரும் போட்டியிடும் நிலையில் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் சிவசாமி, பொதுச் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்.

பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், கார்த்தி இருவரிடையே போட்டி நிலவுகிறது.

இதைத் தவிர குட்டி பத்மினி, பிரசன்னா, ராஜேஷ், கே.ஆர். செல்வராஜ், ராம்கி, நளினி, நந்தா, விக்னேஷ் உள்ளிட்ட 48 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

சரத்குமார் அணியினர் 11-இல் ஆலோசனைக் கூட்டம்: சரத்குமார் தலைமையிலான அணியினருக்கும், நாசர் தலைமையிலான அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால் இரு தரப்பும் தீவிர பிரசார வியூகங்களை வகுத்து ஆதரவு திரட்டி வருகின்றன.

நடிகர் நாசர் தலைமையிலான அணி சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு நாடக நடிகர்களின் ஆதரவைத் திரட்டி வருகிறது.

இந்நிலையில், சரத்குமார் தலைமையிலான அணியினரின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

வேட்பாளர்களின் அறிமுகத்துக்குப் பிறகு தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.