Show all

ஆறுதல் தரும் தேநீர் கடைக்காரர்! தமிழக அரசின் நெகிழித்தடைக்கு எதிராக அல்லல் படும் மக்களுக்கு

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்நாடு முழுவதும் நெகிழி உறைகள், தூக்குப்பைகள் உள்ளிட்ட மக்காத பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதைமீறி செயல்படும் வர்த்தக நிறுவனங்களில் சோதனை நடத்தி அபராதம் விதிக்கும் அதிகாரம் அந்ததந்த பகுதியில் உள்ள அரசு பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், மளிகைக்கடை, உணவகம், தேநீர்கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் மீன் சந்தை உள்ளிட்ட இடங்களில் நெகிழி உறைகள், தூக்குப்பைகள் உள்ளிட்ட மக்காத பொருட்களின் நடமாட்டம் முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

முன்னர் வீட்டில் இருந்து கையை வீசியவாறு கடைகளுக்கு சென்றவர்கள் நெகிழி உறைகளில் பொருட்களை வாங்கிவந்து பழக்கப்பட்டு விட்டனர். சிலர் அலுவலகங்களில் இருந்து வரும் வழியில் காய்கறி, பலகாரங்கள் உள்ளிட்ட பொருட்களை நெகிழி தூக்குப் பைகளில் வைத்து வீட்டுக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர்.

மேலும், இட்லி மாவு, தேநீர், குழம்பி போன்ற பொருட்களும் முன்னர் உறைகளில் கட்டிக்கொடுக்கப்பட்ட நிலையில் நெகிழிப் பொருட்கள் மீதான இந்தத் தடை தமிழக மக்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

இந்தக் குறையை போக்க தன்னால் முடிந்த தீர்வாக, சென்னை ஓட்டேரி பகுதியில் ஒரு தேநீர்கடை உரிமையாளர் தனது வாடிக்கையாளர்களுக்கு நூற்றுக்கணக்கான உலோக தூக்குகளை இலவசமாக அளித்து வருகிறார்.

சென்னை ஓட்டேரி, புதிய வாழைமாநகர் பகுதியில் சுமதி தேநீரகம் என்ற பெயரில் தேநீர்க்கடை நடத்திவரும் ரங்கசாமி என்பவர், தனது நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு தூக்கிச் செல்லும் வகையில் பிடியுடன் கூடிய எவர்சில்வர் தூக்குகளை இலவசமாக அளித்து வருகிறார்.

இதுவரை சுமார் 300 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த் ரங்கசாமி, சுமார் 70 ரூபாய் விலையுள்ள தூக்கு  என்பதால் எனக்கு ஏன் இன்னும் கொடுக்கவில்லை? என பல வாடிக்கையாளர்கள் தொடர்ந்து படை எடுத்து வருகிறார்கள் என்கிறார். அனைவருக்கு சில்வர்தூக்கு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுவாக தேநீர் கடைக்காரர்கள் என்றாலே வாடிக்கையாளர் நலனில் அக்கரை உள்ளவர்களாக இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடியும். கிராமங்களில் தொன்னூறு விழுக்காட்டினர் கண்விழித்ததும், தேநீர் அருந்த, தேநீர் கடைக்குச் சென்று தேநீர் கடைக்காரர் முகத்தில்தான் விழிப்பார்கள். 

அப்புறம் ஏன் தேநீர் கடை வைத்திருந்ததாக பெருமை பீற்றிக் கொள்ளும் மோடி தனக்கு வாக்களித்த மக்களுக்கு அறுத்த கைக்கு சுண்ணாம்பு தரக்கூடத் தயாராக இல்லை. நிச்சயம் அவர் தேநீர் கடை வைத்திருந்திருக்க மாட்டார் உறுதியாக அடகு பிடிக்கும் கடைதான் வைத்திருந்திருப்பார் என்று பேசிக் கொள்கிறார்கள் மக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,024.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.