Show all

தமிழ்த் திரை அமைப்புகளின் தலைமை பதவிகளுக்கு தமிழர்களே தேர்வு செய்யப்பட வேண்டும்.

தமிழ்த் திரை அமைப்புகளின் தலைமைப் பதவிகளுக்கு தமிழர்களே தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடக்கும் பிரச்னைகள் நான்கு சுவற்றுக்குள் பேசித் தீர்க்கப்பட வேண்டியவை. ஆனால் அரசியல் கட்சிகள் போல் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொள்வது வருத்தமளிக்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை தமிழ் நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்பதுதான் முதலில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னை. ஆனால், அது குறித்த தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் அந்தத் தீர்மானம் என்ன காரணத்தினாலோ நடைமுறைக்கு வரவில்லை.

நம் மண்ணின் மைந்தர்களும் பிற மொழிக் கலைஞர்களும் ஒரு காலத்தில் இங்கே ஒன்றாகச் செயல்பட்டு வந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு பிற மொழிக் கலைஞர்கள் தனியாக பிரிந்து சென்றுவிட்டனர். அவரவர் மாநிலங்களிலேயே தங்களுக்கு தனி அமைப்புகளை உருவாக்கிக் கொண்டார்கள். ஆனால் இது நாள் வரை தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் பெயர் மாற்றம் செய்ய மறுத்து வருகின்றன.

நடிகர் சங்கம் உள்ளிட்ட ஏனைய திரை அமைப்புகளில் தமிழர் அல்லாதவர்கள் உறுப்பினராக இருக்கலாம். ஆனால், தலைமைக்கும், நிர்வாகப் பதவிகளுக்கும் அவர்களைத் தேர்ந்தெடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தலைமைப் பதவிகளுக்கு தமிழர்கள் மட்டுமே வர வேண்டும் என எண்ணுகிறேன் எனத் தெரிவித்துள்ளார் பாரதிராஜா.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.