Show all

எங்களோடு இருக்க வேண்டும், அல்லது எங்களுக்கு எதிரியாக இருக்க வேண்டும் என்ற மனநிலை தான் அமெரிக்காவுடையது! இம்ரான்கான் அதிரடி பேட்டி

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தலைமை அமைச்சராகப் பதவியேற்றுள்ள இம்ரான் கான், முதல்முறையாக வெளிநாட்டு ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

நான் தலைமை அமைச்சராகப் பதவியேற்றதும் பாதுகாப்பு படைகள் என்னிடம் முழு விவரங்களையும் வழங்கினார். தீவிரவாதிகள், பாகிஸ்தானில் எங்கே புகலிடம் அமைத்துக் கொண்டுள்ளனர் என்று தெரிவியுங்கள். நாங்கள் அவற்றை அழிக்கிறோம் என்று அமெரிக்கப் படைகளிடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் பதில் வரவில்லை என்று எனது பாதுகாப்பு படையினர் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நடுவேயான எல்லைப்பகுதி அதிகமான கண்காணிப்பு கொண்ட ஒரு பகுதி. அமெரிக்காவும் தனது செயற்கைக் கோள்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமாக எல்லைப்பகுதியை கண்காணித்துக்கொண்டு உள்ளது. அப்படி இருக்கும்போது தீவிரவாதிகள் எப்படி பாகிஸ்தானுக்குள் வர முடியும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் எந்த மாதிரி உறவு இருக்க வேண்டுமென்று உங்களுக்கு திட்டம் உள்ளதா அல்லது சீனாவுடன் நெருக்கம் காட்டுவதை உங்களுக்கு விருப்பம் உள்ளதா என்ற நிருபரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள இம்ரான்கான், பாகிஸ்தானை வாடகைக்கு எடுத்துள்ள துப்பாக்கியை போல பயன்படுத்தும் நாட்டுடன் உறவு வைத்துக் கொள்வதற்கு நான் விரும்பவில்லை.

இன்னொருவரின் போரில் பங்கேற்பதற்கு பாகிஸ்தானுக்கு பணத்தை கொடுத்து பயன்படுத்திக் கொள்வதை ஏற்கமுடியாது. நாங்கள் மீண்டும் அந்த நிலைமைக்கு செல்ல மாட்டோம். எங்களுக்கு மனித உயிர் இழப்புகளை மட்டும் கொடுத்ததோடு மட்டுமின்றி எங்களுடைய மதிப்பையும் இது குறைத்து விட்டது. நாங்கள் நல்ல உறவை மட்டுமே அமெரிக்காவுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சீனாவுடன் எங்களுக்கு உள்ள உறவு என்பது ஒற்றைப் பரிமாணம் கொண்டது கிடையாது. இது இரு நாடுகளுக்கு இடையேயான வணிக உறவு. இதுபோன்ற உறவை தான் அமெரிக்காவுடன் வைத்துக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் அமெரிக்காவின், கொள்கைகளுக்கு ஒத்துப்போகவில்லை என்றால் அது அமெரிக்க எதிர்ப்பு என்று பொருள் கிடையாது. எங்களோடு இருக்க வேண்டும், அல்லது எங்களுக்கு எதிரியாக இருக்க வேண்டும் என்ற மனநிலை தான் அமெரிக்கா கடைபிடிக்கிறது என்று தெரிவித்தார்.

ஒசாமா பின்லேடனை அமெரிக்கா கொன்றதை நீங்கள் ஏற்கவில்லை. இது ஒரு பச்சைப் படுகொலை என்று குறிப்பிட்டீர்களே என்ற நிருபரின் கேள்விக்கு பதில் அளித்த இம்ரான்கான், ஒசாமா பின்லேடனை கொன்றது மட்டுமல்ல. அமெரிக்கா மீதான பாகிஸ்தானின் நம்பிக்கையும் கொல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ராணுவத்தினர், பொதுமக்கள் அமெரிக்காவுடன் இணைந்து தீவிரவாத எதிர்ப்பு போரின் போது பலியாகியுள்ளனர். ஆனால் பாகிஸ்தானை நம்பாமல் அமெரிக்கா தன்னிச்சையாக பின்லேடன் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. பாகிஸ்தானுடன் இணைந்துதான் அமெரிக்கா இதை செய்திருக்க வேண்டும். நாங்கள் அவர்களின் நட்பு நாடா, அல்லது பகைமை நாடா என்பது புரியவில்லை. இவர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,994.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.